செய்திகள்
மாடர்னா தடுப்பூசி மருந்து

மாடர்னா மருந்துக்கு அங்கீகாரம் -அமெரிக்காவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசி தயார்

Published On 2020-12-19 02:52 GMT   |   Update On 2020-12-19 02:52 GMT
மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. 

இதேபோல் மாடர்னா நிறுவன தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எப்டிஏ) விண்ணப்பித்தருந்தனர். இந்த மருந்தின் செயல்திறன் குறித்தும், பரிசோதனை முடிவுகளையும் பரிசீலனை செய்த உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வல்லுநர் குழுவினர், மருந்தை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கலாம் என பரிந்துரை செய்தனர். 

இதையடுத்து மாடர்னா தடுப்பூசிக்கு எப்டிஏ அங்கீகாரம் அளித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் மருந்தை அனுப்பும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதிபர் டுவிட்டரில் இதனை கூறியிருந்தார். மாடர்னா தடுப்பூசி மருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும் என டிரம்ப் கூறியிருந்தார். 

மாடர்னா தடுப்பூசி மருந்தை 30,400 பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த மருந்து 94.1 சதவீதம் செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாடர்னா தடுப்பு மருந்தின் 20 கோடி டோஸ்களை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் சுமார் 60 லட்சம் டோஸ்கள் தற்போது விநியோகத்துக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும். 

மாடர்னா மருந்தை இரண்டு டோஸ்கள் உடலில் செலுத்தப்பட வேண்டும். இரண்டு டோஸ்கள் இடையே 28 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். 
Tags:    

Similar News