செய்திகள்
பில்கேட்ஸ்

அடுத்த 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் - பில்கேட்ஸ் எச்சரிக்கை

Published On 2020-12-14 19:17 GMT   |   Update On 2020-12-14 19:17 GMT
அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்று பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன்:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், உலகின் பெரும் பணக் காரர்களில் ஒருவர் ஆவார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் இணைத்தலைவராகவும் இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணிக்கு இந்த அறக்கட்டளை நிதிஉதவி அளித்து வருகிறது.

இதுபோன்ற பெருந்தொற்று உலக அளவில் பரவும் என்று கடந்த 2015-ம் ஆண்டிலேயே பில்கேட்ஸ் கணித்திருந்தார். இந்தநிலையில், பில்கேட்ஸ் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம், மிக மோசமாக இருக்கும். ஐ.எச்.எம்.இ. என்ற சுகாதார நிறுவனம், மேலும் 2 லட்சம்பேர் கொரோனாவுக்கு பலியாவார்கள் என்று கணித்துள்ளது.

ஆகவே, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், பெருமளவு உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

கடந்த 2015-ம் ஆண்டு நான் கணித்தபோது, உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தேன். எனவே, இன்னும் அதிக உயிரிழப்புகளை கொரோனா ஏற்படுத்தக்கூடும். கொரோனா இன்னும் மோசமான காலகட்டத்தை எட்டவில்லை. அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு உஷாராக இருப்பது நல்லது.

ஆனால், அமெரிக்காவிலும், பிற உலக நாடுகளிலும் நான் கணித்ததை விட கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு எனது அறக்கட்டளை ஏராளமான நிதிஉதவி அளித்து வருகிறது. அமெரிக்க அரசுக்கு அடுத்தபடியாக நாங்கள்தான் அதிக நிதிஉதவி அளித்து வருகிறோம்.

கொரோனா தடுப்பூசியை போடுவதில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும், மனித குலம் முழுமைக்கும் அமெரிக்கா உதவ வேண்டும்.

உலக பொருளாதாரம் மீண்டுவர வேண்டும். கொரோனா பலி எண்ணிக்கையை குறைக்க வேண்டும். சர்வதேச ஒத்துழைப்பை தடுப்பது தவறு. அதனால், எல்லா கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனையும் அதிகரிப்பது அவசியம்.

இனிவரும் மாதங்களில் மேலும் சில தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைத்து விடும்.

முன்னாள் ஜனாதிபதிகள் கிளிண்டன், புஷ், ஒபாமா ஆகியோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். அதுபோல், என்னுடைய முறை வரும்போது, நான் வெளிப்படையாகவே தடுப்பூசி போட்டுக்கொள்வேன். மருத்துவ தேவை அடிப்படையில்தான் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். பணபலம் அடிப்படையில் கிடைக்கக்கூடாது.

கொரோனா பாதிப்பு, ஏற்றத்தாழ்வை அதிகரித்துள்ளது. கருப்பினத்தினரும், குறைந்த வருவாய் பிரிவினரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைவருக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க வேண்டும். தடுப்பூசி கிடைத்தாலும், இன்னும் 6 மாதங்களுக்கு எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதால், அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் சிக்கலை சந்தித்துள்ளது.

இருப்பினும், புதிய அரசு, உண்மையான நிபுணர்களை சார்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது. அது எனக்கு திருப்தி அளிக்கிறது. ஆகவே, புதிய நிர்வாகத்தின்கீழ், அமெரிக்காவின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள் மோசமாக இருக்காது என்று கருதுகிறேன்.

இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.
Tags:    

Similar News