செய்திகள்
மாடர்னா தடுப்பூசி (கோப்பு படம்)

மாடர்னா நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக 10 கோடி தடுப்பூசி மருந்துகள் வாங்கும் அமெரிக்கா

Published On 2020-12-12 03:08 GMT   |   Update On 2020-12-12 03:08 GMT
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், தடுப்பூசி மருந்துகளை கூடுதலாக கொள்முதல் செய்யும் நடவடிக்கையை அரசு தொடங்கி உள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.61 கோடியாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தினசரி தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். 

கொரோனா தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் அரசு மருந்து கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது. 

தற்போது பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை வந்துவிடக்கூடாது என்பதால் கூடுதல் மருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளது.

மாடர்னா நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக 100 மில்லியன் டோஸ்கள் (10 கோடி) தடுப்பூசி மருந்தை வாங்குவதற்கு அரசு ஆர்டர் கொடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாடர்னா தடுப்பூசி ஆர்டர் இருமடங்காக உயர்ந்துள்ளது.

அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 1.65 பில்லியன் டாலர் மதிப்பிலான தடுப்பூசி மருந்துகள் அமெரிக்காவுக்கு டெலிவரி செய்யப்படும் என மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் தொடர்ந்து தடுப்பூசி மருந்தை வழங்கும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே பைசர் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. எனவே, இந்த மருந்து இன்னும் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News