செய்திகள்
பெஞ்சமின் (இஸ்ரேல் பிரதமர்) - டிரம்ப் (அமெரிக்க அதிபர்)

இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்ட மொராக்கோ - இந்த ஆண்டில் இது 4-வது அரபு நாடு...

Published On 2020-12-11 14:35 GMT   |   Update On 2020-12-11 14:35 GMT
இஸ்ரேல் மற்றும் அரபு நாடான மொராக்கோ இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.

ஆனால், பிற அரபு  நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் பல்வேறு அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்ததில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் அரபு நாடுகள் இஸ்ரேலை  தனிநாடாக அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராகவும் அங்கீகரித்து வருகிறது. 

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் இந்த ஆண்டில் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் மற்றும் சூடான் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

இந்த நாடுகள் இஸ்ரேலுடன் தங்கள் உறவை சுமூகமாக்கியுள்ளது. வர்த்தகம், சுற்றுலா,தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்நாடுகள் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளது. 

இதனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே மோதல் குறைந்து அமைதி ஏற்படும் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரபு நாடான மொராக்கோ இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அல்ஜீரியாவுக்கும் - மொராக்கோவுக்கும் இடையே மேற்கு சஹாரா பாலைவனப்பகுதியை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சனை நிலவி வந்தது. 

அல்ஜீரியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். இதனால், மேற்கு சஹாரா பகுதி சர்ச்சைக்குரிய இடமாக அமெரிக்கா கருதிவந்தது. 



ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் மொராக்கோ மன்னர் முகமதுவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். 

அந்த பேச்சுவார்த்தையில் சஹாரா பாலைவனத்தின் மேற்கு பகுதியை மொராக்கோவின் அங்கமாக அங்கீகரிப்பதாகவும், அதற்கு பதிலாக மொராக்கோ இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்து அந்நாட்டுடன் 
அமைதி ஒப்பந்தத்தை செய்துகொள்ளவேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மொராக்கோ மன்னர் முகமது இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்து அந்நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்வது மட்டுமல்லாமல் முழுமையான தூதரக உறவை தொடங்கவும் சம்மதம் தெரிவித்தார். 

இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் (2020) இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்ட 4-வது அரபு நாடு என்ற பட்டியலில் மொராக்கோ இணைந்துள்ளது. 

இதற்கு முன்னதாக இந்த ஆண்டில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சூடான் ஆகிய 3 அரபு நாடுகள் ஏற்கனவே இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தன. 

இந்த அமைதி ஒப்பந்தம் மூலம்  மொராக்கோ - இஸ்ரேல் இடையே தூதரகம், வர்த்தகம், சுற்றுலாத்துறை உள்பட பல்வேறு துறைகளில் சுமூக உறவு ஏற்பட உள்ளது.

இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

‘மேலும் ஒரு வரலாற்று நிகழ்வு இன்று நிகழ்ந்துள்ளது! நமது இரண்டுசிறந்த நண்பர்களான இஸ்ரேலும், மொராக்கோவும் முழுமையான ராஜாங்க ரீதியிலான உறவை தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வருவதில் மிகப்பெரிய சாதனை’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News