செய்திகள்
ஆன்டனியோ குட்டரெஸ்

தடுப்பூசியை பகிரங்கமாக செலுத்திக்கொள்வேன் - ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அறிவிப்பு

Published On 2020-12-10 20:22 GMT   |   Update On 2020-12-10 20:22 GMT
தடுப்பூசியை பகிரங்கமாக போட்டுக்கொள்வேன், அது எனது தார்மீக கடமை என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறினார்.
நியூயார்க்:

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமைச்செயலகத்தில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம்,“கொரோனா தடுப்பூசி உங்களுக்கு கிடைக்கும்போது அதை பகிரங்கமாக செலுத்திக்கொள்வீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “நிச்சயமாக. தடுப்பூசி எனக்கு கிடைக்கிறபோது, அதை நான் பகிரங்கமாக பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன். பகிரங்கமாக என்று சொல்வதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என பதில் அளித்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடுப்பூசியை அணுகக்கூடிய அனைவரையும் போட்டுக்கொள்ளுமாறு நான் ஊக்குவிக்கிறேன். ஏனென்றால் இது ஒரு சேவை ஆகும்.

நாம் நமக்கு வழங்குவது மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது முழு சமூகத்துக்கும் ஒரு சேவையை வழங்குகிறது. ஏனென்றால், நாம் தொற்றுநோயை இனி பரப்புவது இல்லை. நோய் பரவும் ஆபத்தும் இல்லை. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது நம் அனைவருக்கும் தார்மீக கடமை ஆகும்.

தடுப்பூசி உலகளாவிய பொது நன்மைக்காக எல்லா இடங்களிலும் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிலும் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News