செய்திகள்
அமேசான் காட்டுத்தீ

18 ஆண்டுகளில் ஸ்பெயினின் மொத்த பரப்பளவை விட அதிக அளவில் அமேசான் காடுகள் அழிப்பு..

Published On 2020-12-09 22:49 GMT   |   Update On 2020-12-09 22:49 GMT
18 ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகள் எத்தனை சதவிகிதம் அழிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலா:

காடுகள் இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்று. ஆனால் மனிதர்களின் தேவை பெருகவே காடுகள் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டன. 
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேசில், பெரு, வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா, ஈக்வடார், கயானா ஆகிய நாடுகளில் அமேசான் மழைக்காடுகள் பரவியுள்ளது.

ஆனாலும், அமேசானின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் தான் உள்ளது. அதிக அளவில் ஆக்சிஜனையும் மழைப்பொழிவையும் தரும் அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது. 

அமேசான் மழைக்காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது உலக நாடுகளை கவலையடைய செய்தது. இந்த காட்டுத்தீயில் சிக்கி பல்லாயிரக்கணக்கான அரியவகை வன உயிரினங்கள், மரங்கள் ஆகியவை அழிந்தன. 

அமேசான் மழைக்காடுகளின் பெரும் பகுதி பிரேசிலில் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் போல்சனரோ தலைமையிலான அரசு, காட்டை பாதுகாக்க தவறிவிட்டதாகவும்,  காட்டு அழிப்பை ஊக்குவிப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், 2000 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகளில் அமேசானில் காடுகள் எவ்வளவு அழிக்கப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரங்களை அமேசான் அட்லஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி 2000 முதல் 2018 ஆம் ஆண்டுவரை மொத்தமாக 5 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இவை காட்டுத்தீ, மனிதர்களால் மேற்கொள்ளப்படும் காடுகள் அழிப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் நிகழ்ந்துள்ளது.

5 லட்சத்து 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் என்பது ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட அதிகம் ஆகும். ஸ்பெயினின் மொத்த பரப்பளவு 5 லட்சத்து 5 ஆயிரத்து 990 கிலோமீட்டர்கள் ஆகும்.

2000 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகளில் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவில் 8 சதவிகிதம் அழிக்கப்பட்டுள்ளது என்பது 
தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News