செய்திகள்
ஜோ பைடன்

அமெரிக்க மக்கள் 100 நாட்கள் முக கவசம் அணிய வேண்டும்- ஜோ பைடன் வலியுறுத்தல்

Published On 2020-12-04 21:12 GMT   |   Update On 2020-12-04 21:12 GMT
தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் அமெரிக்க மக்கள் 100 நாட்கள் முக கவசம் அணிய வேண்டும் என ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டன்:

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவின் முதல் அலையை விட 2-வது அலை மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு தினமும் சுமார் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

அதேபோல் உயிரிழப்பும் ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனிடையே இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி அமெரிக்காவில் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள ஜோ பைடன் அதற்கான பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கியுள்ளார். முக கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என ஜோ பைடன் நம்புகிறார்.

இந்த நிலையில் தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும், தனது பதவி காலத்தில் முதல் 100 நாட்கள் மக்கள் முக கவசம் அணிய வலியுறுத்துவேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறுகையில், “நான் பதவியேற்கும் முதல் நாளில், அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்பேன். வாழ்நாள் முழுவதும் அல்ல. வெறும் 100 நாட்கள் மட்டும் முக கவசம் அணியுமாறு கேட்கப்போகிறேன்” என்றார்.

அமெரிக்காவை பொறுத்தவரையில் ஒரு புதிய ஜனாதிபதி பதவியின் முதல் 100 நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒரு ஜனாதிபதி எவ்வாறு சிறப்பாக வேலை செய்கிறார் என்பதற்கான அளவீடாக இது கருதப்படுகிறது.

ஒவ்வொரு அமெரிக்கரும் முக கவசம் அணிந்தால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறையும் என நம்பும் ஜோ பைடன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் மாகாணங்களுக்கு இடையிலான விமானங்கள் மற்றும் பஸ் போக்குவரத்தில் பயணிகள் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட போவதாகவும் அவர் கூறினார்.

அதே சமயம் அமெரிக்க மக்களை முக கவசம் அணியுமாறு கட்டளையிட ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று அரசியலமைப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News