செய்திகள்
கோப்புப்படம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடத்திய இந்தியாவுக்கு சீனா பாராட்டு

Published On 2020-12-02 20:56 GMT   |   Update On 2020-12-02 20:56 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை நடத்திய இந்தியாவுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.
பீஜிங்:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்.சி.ஓ.) 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன. சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஏற்கனவே இருந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து கொண்டன.

இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் அரசாங்க தலைவர்கள் மாநாடு, கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடந்த அந்த மாநாட்டை முதல்முறையாக இந்தியா நடத்தியது. அதில், சீன பிரதமர் லி கேகியாங், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், இதற்காக இந்தியாவுக்கு சீனா நேற்று பாராட்டு தெரிவித்தது. மாநாட்டை இந்தியா நடத்தியது பற்றியும், அதன் முடிவுகள் குறித்தும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங்கிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியதாவது:-

இந்தியா முதல்முறையாக இம்மாநாட்டை நடத்தி உள்ளது. முந்தைய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை எப்படி அமல்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை எப்படி அதிகரிப்பது என்று தலைவர்கள் பேசினர். சில கருத்தொற்றுமைகள் ஏற்பட்டன.

இந்த முடிவுகள் குறித்து எல்லா தலைவர்களும் உயர்வாக பேசினர். மாநாட்டை நடத்தியதற்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை தரம் உயர்த்தவும், ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்தியா உள்ளிட்ட உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News