செய்திகள்
கார்கள் அமீரக தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்டு வலம் வந்த காட்சி.

அமீரக தேசிய தினத்தையொட்டி துபாயில் படகு மற்றும் கார் அணிவகுப்பு

Published On 2020-12-02 02:22 GMT   |   Update On 2020-12-02 02:22 GMT
அமீரக தேசிய தினத்தையொட்டி துபாயில் படகு மற்றும் கார் அணிவகுப்பு நேற்று நடந்தது.
துபாய்:

அமீரகத்தின் 49-வது தேசிய தின கொண்டாட்டம் துபாய் உள்ளிட்ட அமீரகம் முழுவதும் களை கட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக துபாய் மரினா பகுதியில் உள்ள கடலில் படகுகள் அணிவகுக்கும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று காலை 11.45 மணிக்கு நடந்தது. 20-க்கும் மேற்பட்ட அதி நவீன மோட்டார் படகுகள், தண்ணீரில் விளையாட பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை இந்த கடல் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றன.

இதற்காக இந்த படகுகள் அனைத்தும் அமீரகத்தின் தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்டது. அமீரக தேசிய கொடி வண்ணத்தில் பலூன்களும் இந்த படகுகளை அலங்கரித்தன. மேலும் மரினா கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்ற பின்னர் படகில் இருக்கும் கொடிக்கம்பத்தில் அமீரக தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கடல் பகுதியில் அமீரக தேசிய கொடி வண்ணத்தில் படகுகள் வலம் வரும் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்த நிகழ்ச்சியை பார்வையிட துபாய் மட்டுமல்லாது, சார்ஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகளும் இந்த படகு அணிவகுப்பை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.


இந்த பகுதிக்கு பொதுமக்கள் அதிகமாக வந்ததன் காரணமாக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீசாரால் செய்யப்பட்டிருந்தது. இந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடித்தனர். அமீரக தேசிய தினத்தையொட்டி துபாயில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

துபாய் அல் மம்சார் பகுதியில், அமீரக தேசிய கொடியின் வண்ணத்தில் கார்கள் அணிவகுப்பாக வலம் வந்தன. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News