செய்திகள்
கோப்புப்படம்

அரச குடும்பத்தை சாராத நபருடன் காதல் - மகளின் திருமணத்துக்கு ஜப்பான் இளவரசர் சம்மதம்

Published On 2020-11-30 19:12 GMT   |   Update On 2020-11-30 19:12 GMT
நீண்ட ஒத்திவைப்புக்கு பிறகு தனது மகளின் காதல் திருமணத்துக்கு பட்டத்து இளவரசர் அகிஷினோ தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ:

ஜப்பானின் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரரும் பட்டத்து இளவரசருமான அகிஷினோவின் மகள் மாகோ (வயது29). ஜப்பானின் இளவரசியான இவர் அரச குடும்பத்தை சாராத தனது பல்கலைக்கழக நண்பரான கெய் கொமுரோவை திருமணம் செய்து கொள்ள போவதாக கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார். இந்த திருமணம் நடந்தால் மாகோ தனது அரச குடும்ப அந்தஸ்தை இழக்க நேரிடும் என்ற போதும், அது பற்றித் துளியும் கவலைப்படாமல் தனது காதலரை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து 2018-ம் ஆண்டில் இவர்களது திருமணம் நடக்கும் என அரச குடும்பத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தத் திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

கெய் கோமுரோவின் குடும்பம் நிதி நெருக்கடியில் உள்ளதாலும், அவரது தாயார் தனது முன்னாள் கணவரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததாலும் இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இந்தநிலையில் நீண்ட ஒத்திவைப்புக்கு பிறகு தனது மகளின் திருமணத்துக்கு பட்டத்து இளவரசர் அகிஷினோ தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் “திருமணம் என்பது இரு பாலினத்தின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே அமையும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. எனவே அவர்கள் உண்மையிலேயே விரும்பினால் ஒரு பெற்றோராக அது நான் மதிக்க வேண்டிய ஒன்று என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

எனினும் மாகோ-கெய் கொமுரோவின் திருமணம் எப்போது நடைபெறும் என்பது முறையாக அறிவிக்கப்படவில்லை.
Tags:    

Similar News