செய்திகள்
பிரேசில் அதிபர் போல்சோனாரோ

’கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன்... அது என் உரிமை’ - பிரேசில் அதிபர்

Published On 2020-11-27 13:13 GMT   |   Update On 2020-11-27 13:13 GMT
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என்று பிரேசில் அதிபர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார்.
பிரேசிலா:

உலகையையே உலுக்கி வரும் கொரோனா வைரசை அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ. 

முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போல்சோனாரோவுக்கு கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தனிமைப்படுத்திக்கொண்ட போல்சோனாரோ ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துவந்தார். அவருக்கு, 3 முறை கொரோனா பரிசோதனையிலும் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது. 

தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்ட 4-வது கொரோனா பரிசோதனையில் போல்சொனாரோவுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு
வந்ததையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்தார்.

இதற்கிடையில், கொரோனா வைரசை தடுக்கும் வகையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் கொரோனா வைரசை தடுப்பதில் நல்ல பலன் அளிக்கிறது. 

தடுப்பூசி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட உடன் அதை உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.   

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அந்த தடுப்பூசியை தான் போட்டுக்கொள்ளப்போவதில்லை என கூறி அதிபர் போல்சோனாரோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சமூகவலைதளம் வாயிலாக நடைபெற்ற நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போல்சோனாரோ, ‘நான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப்போவதில்லை. அது என் உரிமை’ என கூறினார்.  

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் நாடு 3-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் 62 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News