செய்திகள்
ஒட்டகங்களின் எலும்பு கூடுகள்

துபாய் பாலைவனத்தில் பிளாஸ்டிக் தின்று உயிரிழந்த நூற்றுக்கணக்கான ஒட்டகங்களின் எலும்பு கூடுகள் கண்டெடுப்பு

Published On 2020-11-26 23:20 GMT   |   Update On 2020-11-26 23:20 GMT
துபாய் பாலைவன பகுதிகளில் பிளாஸ்டிக் தின்று உயிழந்த நூற்றுக்கணக்கான ஒட்டகங்களின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
துபாய்:

துபாய் புறநகர் பாலைவன பகுதிகளில் ஏராளமான ஒட்டகங்கள் வசித்து வருகின்றன. இந்த ஒட்டகங்களின் நலனை பராமரிக்க மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்கவத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் பாலைவன பகுதிகளில் மேய்ச்சலுக்காக செல்லும் ஒட்டகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

பாலைவன பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அங்கு உயிரிழந்த ஒட்டகங்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடுகளின் அருகே மூட்டையாக பிளாஸ்டிக் குவியல்கள் இருந்தன. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது அவை அனைத்தும் அந்த ஒட்டகங்கள் சாப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் குவியல் மட்காமல் வெகு நாட்களாக பாலைவன பகுதியில் அப்படியே கிடந்துள்ளது. இது குறித்து துபாய் மத்திய கால்நடை ஆய்வகத்தின் அறிவியல் இயக்குனர் டாக்டர் உல்ரிச் வார்னெரி கூறியதாவது:-

வயிற்றை நிரப்ப பிளாஸ்டிக்குகளை உணவாக அந்த ஒட்டகங்கள் உட்கொண்டுள்ளன. இது உண்மையில் வேதனையளிப்பதாக உள்ளது. இதன் மூலம் சீரணமாகாமல் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். பட்டினி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் ஒட்டகங்கள் பிளாஸ்டிக்கை உணவாக சாப்பிடுகிறது.

தற்போது இதுபோன்ற ஒட்டகங்கள் அடையாளம் காணப்பட்டு கால்நடை ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. பாலைவன பகுதிகளில் சுற்றுலாவுக்கு வருபவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதால் அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட நேரிடுகிறது. எனவே பொதுமக்களுக்கும் ஒட்டகங்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கும் விதமாக சுகாதாரமாக கழிவுகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை பிளாஸ்டிக்கை உட்கொண்டு சுமார் 300 ஒட்டகங்கள் பாலைவன பகுதியில் பலியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஒட்டகங்களின் வயிற்றில் சுமார் 53 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் இருந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News