செய்திகள்
ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய மந்திரிகளை இன்று அறிவிக்கிறார் ஜோ பைடன்

Published On 2020-11-23 21:17 GMT   |   Update On 2020-11-23 21:17 GMT
ஜோ பைடன் தனது தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். இந்தநிலையில் ஜோ பைடன் தனது தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அமெரிக்காவின் புதிய மந்திரிகள் யார் யார் என்பதை இன்று அவர் அறிவிக்கிறார்.

இதுகுறித்து ஜோ பைடனின் மந்திரிசபை வேட்பாளர்கள் குழுவை மேற்பார்வையிடும் ஜென் சாகி கூறுகையில், “ஜோ பைடன் தனது அணியின் உறுப்பினர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆவலுடன் உள்ளார். அவரது மந்திரி சபை சித்தாந்தம் மற்றும் பின்னணி அடிப்படையிலான அமெரிக்காவைப் போல இருக்கும்” என்றார்.

இதற்கிடையில் அமெரிக்காவின் புதிய வெளியுறவு மந்திரியாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பதவி காலத்தில் வெளியுறவு இணை மந்திரியாக இருந்த ஆண்டனி பிலிங்கெனை (வயது 58) ஜோ பைடன் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதேபோல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான ஜாக் சல்லிவனை ஜோ பைடன் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News