செய்திகள்
அப்துல் அகமது அப்துல்

சரியாக 22 ஆண்டுகள்...அல்கொய்தாவின் 2-வது முக்கிய தலைவன் ஈரானில் சுட்டுக்கொலை - இஸ்ரேலின் மொசாட் அதிரடி

Published On 2020-11-15 17:48 GMT   |   Update On 2020-11-15 18:07 GMT
அல்கொய்தாவின் 2-வது முக்கிய தலைவனை அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலின் மோசாட் அதிரடி படையினர் ஈரானில் சுட்டுக்கொன்றுள்ளனர்.
தெஹ்ரான்:  

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடன் அமெரிக்க படையினரால் பாகிஸ்தான் வைத்து கொல்லப்பட்டான். 

இதையடுத்து, 2011 ஆம் ஆண்டு அல்கொய்தாவின் புதிய தலைவனாக அய்மென் முகமது ரபீப் அல் ஜவாஹாரி பொறுப்பெற்றான்.

ஆனாலும், ஒசாமா தலைவனாக இருந்த போதில் இருந்தே அல்கொய்தாவின் 2-வது முக்கிய தலைவன் பொறுப்பில் எகிப்தை சேர்ந்த அப்துல் அகமது அப்துல் (அபு முகமது அல் மஸ்ரி) செயல்பட்டு வந்தான்.

இதற்கிடையில், 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மேற்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் அமைந்திருந்த அமெரிக்க தூதரகங்கள் மீது அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 

இந்த கோர தாக்குதலுக்கு அல்கொய்தாவின் 2-வது முக்கிய தலைவன் பொறுப்பில் உள்ள அப்துல் அகமது அப்துல் மூளையாக செயல்பட்டான். 

இதையடுத்து, அந்த பயங்கரவாதியை தேடும் பணியில் அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. மேலும், அந்த பயங்கரவாதியை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா அதன் நட்பு நாடான இஸ்ரேலை நாடியது.

இதையடுத்து, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் மற்றும் அமெரிக்காவின் சிஐஏ இணைந்து தூதரக தாக்குதலில் மூளையாக செயல்பட்ட அப்துல்லை கண்டுபிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியது.

இதற்கிடையில், ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்த 57 வயது நிரம்பிய ஒரு நபரையும், அதே காரில் இருந்த 27 வயது நிரம்பிய ஒரு இளம் பெண்ணையும் பைக்கில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

கொல்லப்பட்ட 2 பேரும் லெபனானை சேர்ந்தவர்கள் என ஈரான் அரசு தெரிவித்தது. ஆனால், அவர்கள் தொடர்பான எந்த விவரத்தையும் அப்போது ஈரான் அரசு அளிக்கவில்லை. 

இந்நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதி தெஹ்ரானில் கொல்லப்பட்ட நபர் அல்கொய்தா அமைப்பின் 2-வது முக்கிய தலைவன் அகமது என்பதும் அந்த இளம்பெண் அகமதுவின் மகள் மர்யம் என்பதும் தெரியவந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதல் தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதல் அமெரிக்க தூதரகங்கள் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகி சரியாக 22-வது ஆண்டு நினைவு தினத்தன்று நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் படையினர் மூலமாக அல்கொய்தாவின் 2-வது தலைவன் மற்றும் அவனது மகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். ஆனால், அகமது எப்படி கொல்லப்பட்டான் என்ற தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

பயங்கரவாதி அப்துல் அமகது அப்துல்லின் மகள் மரியமும் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டு கொடுத்ததும் மொசாட், சிஐஏ-வின் ரகசிய கண்காணிப்பில் தெரியவந்ததையடுத்து அவரும் கொல்லப்பட்டுள்ளார். 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஈரானில் நடைபெற்றது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதில் உண்மையில்லை என்றும் இஸ்ரேலும், அமெரிக்காவும் பொய்களை அவிழ்த்து விடுவதாக ஈரான் குற்றச்சாட்டியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 
Tags:    

Similar News