செய்திகள்
வன்முறை

வாஷிங்டனில் டிரம்புக்கு ஆதரவான பேரணியில் கடும் வன்முறை- பலர் காயம்

Published On 2020-11-15 04:26 GMT   |   Update On 2020-11-15 04:26 GMT
அமெரிக்காவில் தேர்தல் தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் கடும் வன்முறை வெடித்தது.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், 306 தேர்தல் சபை வாக்குகளை பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் அமெரிக்காவில் தாங்கள் அதிபர் பதவி ஏற்ற பின், அடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்க தொடங்கிவிட்டனர்.

ஆனால் தோல்வியை ஏற்பதற்கு டிரம்ப் தயாராக இல்லை. தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய டிரம்ப் இதுதொடர்பாக சட்டப்போராட்டத்திற்கு தயாராகி வருகிறார். அதேசமயம், டிரம்பின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டன் டிசியில் பேரணியாக சென்றனர். இவர்களுடன் பல அமைப்புகளும் இணைந்தன. டிரம்புக்கு ஆதரவாகவும், தேர்தல் முடிவுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். நேற்று இரவு நடந்த இந்த பேரணியில் திடீர் வன்முறை வெடித்தது.

போராட்டம் நடத்திய ஆன்டிஃபா மற்றும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் குழுக்களுக்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வன்முறை உருவானது. டிரம்பின் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். கட்சி கொடிகளை பறித்து தீயிட்டு கொளுத்தினர். டிரம்புக்கு ஆதரவான டிஷர்ட்டுகளை விற்பனை செய்த வியாபாரிகளின் மேஜைகளை தூக்கி போட்டு கவிழ்த்தனர். இதனால் இரவு முழுவதும் மோதல் நீடித்தது. வாஷிங்டனில் உள்ள 5 பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதலில் இரு தரப்பிலும் பலருக்கு காயம் ஏற்பட்டது. 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News