செய்திகள்
உதவியாளர் லீ கெயின்

போரிஸ் ஜான்சனின் காதலியால் பிரதமர் இல்லத்தில் பெரும் குழப்பம் -முக்கிய உதவியாளர் ராஜினாமா

Published On 2020-11-13 09:24 GMT   |   Update On 2020-11-13 09:24 GMT
பிரிட்டன் பிரதமரின் இல்லத்தில் பிரதமரின் காதலியால் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் முக்கிய உதவியாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
லண்டன்:

பிரிட்டன் பிரதமர் இல்லத்தில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும், பிரதமரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த பிரச்சினைகளின் பின்னால் இருப்பவர் பிரதமரின் காதலியான கேரி சைமண்ட்ஸ் எனவும் கூறப்படுகிறது.

பிரதமர் இல்லத்தில் கேரி அணி என்று ஒன்றும் டொமினிக் கம்மிங்ஸ் அணி என்று ஒன்றும் உள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் நீண்ட கால உதவியாளராக இருந்தவர் டொமினிக் கம்மிங்ஸ். இவர் அணியைச் சேர்ந்த லீ கெயின் இந்த வாரம் அவருக்கு பெரிய பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதையும் மீறி, அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கு காரணம், பிரதமரின் காதலி கேரியின் எச்சரிக்கையையும் மீறி லீயை அப்பதவியில் அமர்த்தினார் பிரதமரின் ஆலோசகரான டொமினிக். அது கேரிக்கு எரிச்சலூட்டி உள்ளது. பிரதமர் வீட்டுக்குள் பனிப்போர் ஒன்று புகைந்துகொண்டே இருந்திருக்கிறது.

இந்நிலையில், பிரதமரின் ஆலோசகர்களால் பிரதமருக்கு சரியான ஆலோசனை அளிக்கப்படவில்லை என்று குறை கூறியிருக்கிறார் கேரி. அத்துடன், ஊடக செயலரான அலெக்ரா ஸ்ட்ராட்டன் என்பவருக்கும் மூத்த உதவியாளரான முனிரா மிர்ஸா என்பவருக்கும் லீயை  பதவியில் அமர்த்தியது பிடிக்கவில்லை.

ஆகவே, அலெக்ரா, தான் லீயிடம் வேலை செய்ய முடியாது, எதுவானாலும் நேரடியாக பிரதமரிடம் தான் பேசுவேன், அதற்கு சம்மதித்தால் மட்டுமே வேலை செய்வேன் என்று கோர, அதன்படி அவரை அனுமதித்துள்ளார் கேரி.

இது தன்னை அவமதிக்கும் செயல் என்பது போல் உணர்ந்துள்ளார் லீ. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இனியும் பிரதமரின் காதலியுடன் எல்லாம் சண்டை போட்டுக்கொண்டு நிம்மதியை இழக்கமுடியாது என்று முடிவு செய்த லீ, ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார்.

இதற்கு அடுத்தபடியாக, இன்னும் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அது என்னவென்றால், அடுத்ததாக டொமினிக் கம்மிங்ஸ் பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை அவர் மறுத்து உள்ளார்.
Tags:    

Similar News