செய்திகள்
அண்டோன் மக்ரவ்

ரஷியா: விமானப்படை தளத்தில் ராணுவ வீரர் துப்பாக்கிச்சூடு - சக வீரர்கள் 3 பேர் பலி

Published On 2020-11-09 14:08 GMT   |   Update On 2020-11-09 14:08 GMT
ரஷியாவில் விமானப்படை தளத்தில் ராணுவ வீரர நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ:

ரஷியாவின் தெற்கு பகுதியில் ஒரோனிஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் பல்டிமோர் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தின் விமானப்படை தளம் அமைந்துள்ளது. 

இந்த விமானப்படை தளத்தில் அதிநவீன போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த விமானப்படை தளத்தில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த விமானப்படை தளத்தில் 20 வயது நிரம்பிய அண்டோன் மக்ரவ் என்ற இளைஞன் ராணுவ வீரனாக செயல்பட்டு வந்தான். அந்த ராணுவ வீரனுக்கு அவரது மூத்த அதிகாரிக்கும் இடையே நேற்று சிறு கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்ரவ் இன்று அதிகாலை 5 மணியளவில் சக ராணுவ வீரர்கள் அனைவரும் உறங்கி கொண்டிருந்தபோது ஒரு கோடாரியை எடுத்து ராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்.

மேலும், அந்த வீரரிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றிய மக்ரவ் தன்னை திட்டிய ராணுவ அதிகாரி உள்பட பல வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினான் .

இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் துக்கத்தில் செய்வதறியாது தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடினர். ஆனாலும், மக்ரவ் விடாது துப்பாக்கிச்சுடு நடத்தினார். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இந்த தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மக்ரவ்வை தீவிரமாக தேடிய பாதுகாப்பு படையினர் 5 மணிநேர தேடுதலுக்கு பின் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மக்ரவ்விடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானப்படை தளத்தில் ராணுவ வீரர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News