செய்திகள்
விஜய் மல்லையா, நிரவ் மோடி

விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை

Published On 2020-11-06 00:43 GMT   |   Update On 2020-11-06 00:43 GMT
விஜய் மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இங்கிலாந்து மந்திரியிடம் மத்திய வெளியுறவு செயலாளர் நேரில் வலியுறுத்தினார்.
லண்டன்:

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவும், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியும் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினர். இந்தியாவின் கோரிக்கையின் பேரில் அங்கு கைது செய்யப்பட்ட அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இதில் ஜாமீனில் வெளியில் இருக்கும் விஜய் மல்லையாவின் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதைப்போல லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தியாவில் கோடிக்கணக்கில் கடன் மோசடியில் ஈடுபட்ட இவர்கள் இருவரின் நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியா இங்கிலாந்துக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இதை மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்சவர்தன் ஷ்ரிங்லா நேரில் சென்று கோரிக்கையாக வைத்து உள்ளார்.

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட அவர், லண்டனில் அந்த நாட்டின் பல்வேறு மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். குறிப்பாக உள்துறை செயலாளர் பிரிதி படேல், தெற்கு ஆசியாவுக்கான வெளியுறவு மந்திரி லார்டு தாரிக் அகமது ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது நிரவ் மோடி மற்றும் மல்லையாவை விரைவில் நாடு கடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் இதுகுறித்து ஷ்ரிங்லா கூறுகையில், ‘நாடு கடத்தும் விவகாரத்தில் அனைத்துவிதமான சட்டப்போராட்டங்களை முடித்துள்ள பொருளாதார குற்றவாளி மல்லையாவை விரைவில் நாடு கடத்தும் இந்தியாவின் விருப்பத்தை நாங்கள் தீவிரமாக சுட்டிக்காட்டினோம். அதைப்போல நிரவ்மோடியை நாடு கடத்துவது குறித்தும் லார்டு அகமது மற்றும் பிரிதி படேலிடம் வலியுறுத்தினோம். இதை இருவரும் மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டனர். குறிப்பாக நமது முன்னுரிமை மற்றும் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொண்டனர்’ என்று தெரிவித்தார்.

இதைத்தவிர கொரோனா தடுப்பூசி ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இங்கிலாந்து தலைவர்களுடன் ஹர்சவர்தன் ஷ்ரிங்லா பேசினார்.
Tags:    

Similar News