செய்திகள்
பிரியங்கா ராதாகிருஷ்ணன்

நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மந்திரியாக நியமனம்

Published On 2020-11-02 19:39 GMT   |   Update On 2020-11-03 11:48 GMT
நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் பெண் மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மெல்போர்ன்:

நியூசிலாந்தில் கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த பொது தேர்தலில் பெண் பிரதமர் ஜெசிந்தா அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார். அவர் நேற்று 5 புதிய மந்திரிகளை அறிவித்தார்.

அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணனும் ஒருவர் ஆவர். நியூசிலாந்து வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் மந்திரியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

41 வயதாகும் பிரியங்கா ராதாகிருஷ்ணன் சென்னையில் கடந்த 1979-ம் ஆண்டு பிறந்தவர். சிங்கப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, நியூசிலாந்தில் குடியேறி மேல்படிப்பை முடித்தார்.

இவரது பூர்வீகம் கேரள மாநிலம் கொச்சி பரவூர் ஆகும். இவரது தாத்தா மருத்துவராக பணியாற்றியவர். முதலில், கடந்த 2017-ம் ஆண்டு எம்.பி.யாக பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவருக்கு சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரியங்கா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நம்பமுடியாத ஒரு சிறப்பு நாளாக இருந்து வருகிறது. எங்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சலுகை உணர்வு உள்பட பல விஷயங்களை நான் உணர்கிறேன். எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. ஒரு மந்திரியாக நியமிக்கப்படுவதில் தாழ்மையுடன் இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

புதிய மந்திரிகள் வருகிற 6-ந் தேதி பதவி ஏற்கிறார்கள். சரியாக செயல்படாத மந்திரிகள் நீக்கப்படுவார்கள் என்று பிரதமர் ஜெசிந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News