செய்திகள்
கோப்புப்படம்

எல்லையில் நீடிக்கும் ராணுவ மோதல் : அசர்பைஜான் - ஆர்மேனியா வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு

Published On 2020-10-31 22:58 GMT   |   Update On 2020-10-31 22:58 GMT
எல்லையில் நீடிக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசினர்.
பாகு:

நாகோர்னா காராபாக் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அசர்பைஜான், ஆர்மேனியா ஆகிய இரு நாடுகள் இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இருந்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்த பிரச்சினை இருதரப்பு ராணுவ மோதலாக வெடித்தது. இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் ரஷியா தலையிட்டு 2 முறை சண்டை நிறுத்தங்களை ஏற்படுத்திய நிலையில் இரண்டுமே தோல்வியில் முடிந்தன. அதன்பின்னர் அமெரிக்கா தலையீட்டில் உருவான 3-வது சண்டை நிறுத்தமும் தோல்வி அடைந்தது.

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபடுவதாக இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.

இந்த நிலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசினர்.

அசர்பைஜான் வெளியுறவு மந்திரி சோக்ராப் மனாட்சகன்யான் மற்றும் ஆர்மேனியா வெளியுறவு மந்திரி ஜெய்ஹுன் பேராமோ ஆகிய இருவரும் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கப்படவில்லை.
Tags:    

Similar News