செய்திகள்
மர படகு

துபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்

Published On 2020-10-29 01:02 GMT   |   Update On 2020-10-29 01:02 GMT
துபாய் கிரீக் பகுதியில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மரப்படகிற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படகு கால்பந்து மைதானம் அளவையும், 400 யானைகளை ஏற்றும் திறனும் கொண்டது.
துபாய்:

உலகில் தயாரிக்கப்படும் படகுகளில் அமீரகத்தில் உருவாக்கப்படுவை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக துபாயில் பிரமாண்டமான மரத்திலான படகுகள் இன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 1940-ம் ஆண்டில் ஒபைத் ஜுமா பின் மஜீத் அல் பலாசி என்ற அமீரகத்தை சேர்ந்தவர் பிரபலமான பாரம்பரிய மரப்படகுகளை உருவாக்கி வந்தார்.

தற்போது அவரது குடும்பத்தினர் துபாய் கிரீக் பகுதியில் பாரம்பரிய மரப்படகுகளை தயாரித்து வருகின்றனர். அந்த தொழில் செய்து வரும் அவரது மகன் மஜீத் ஒபைத் அல் பலாசி (52) மற்றும் குடும்பத்தினர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ‘ஒபைத்’ என்ற பெயரில் பிரமாண்டமான மரப்படகை உருவாக்கி வந்தனர்.

தற்போது இந்த படகின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து நேற்று கின்னஸ் சாதனை நிறுவனம் இந்த மரப்படகிற்கு உலகின் பிரமாண்டமான மரப்படகு என சான்றளித்துள்ளது. இந்த படகு குறித்து மஜீத் ஒபைத் அல் பலாசி கூறியதாவது:-

இது 300 அடி நீளமும், 67 அடி அகலமும், 32 அடி உயரமும் கொண்ட படகாகும். கிட்டத்தட்ட கால்பந்து மைதானத்தின் அளவுள்ள படகு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படகின் எடை 2 ஆயிரத்து 500 டன் ஆகும். இதில் சுமார் 2 ஆயிரத்து 500 டன் எடையுள்ள பொருட்களை (400 யானைகளின் எடை) ஏற்றி செல்ல முடியும். இதன் மொத்த கொள்ளளவு 6 ஆயிரம் டன் ஆகும். இந்த படகில் 1,850 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மணிக்கு 14 நாட் (25 கி.மீ) வேகத்தில் பயணிக்க முடியும். வரும் காலங்களில் ஏமன், சோமாலியா, சூடான், எகிப்து, கென்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு சரக்கு வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும், விரைவில் உலகின் அனைத்து துறைமுகங்களிலும் இந்த படகை காணமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்றும் துபாயில் பல உள்ளூர் வர்த்தகர்கள் தொன்று தொட்டு 47 தலைமுறைகளாக பாரம்பரிய படகு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். இதுவரை கின்னஸ் சாதனை புரிந்த உலகின் மிகப்பெரிய மரத்திலான படகு குவைத் நாட்டில் இருந்தது. தற்போது இந்த சாதனையை ஒபைத் மரப்படகு முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News