செய்திகள்
போராட்டத்தில் வன்முறை

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை - எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை

Published On 2020-10-27 19:42 GMT   |   Update On 2020-10-27 19:42 GMT
அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
பிலடெல்பியா:

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் நேற்று முன்தினம் மாலை கருப்பின வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த வாலிபரிடம் துப்பாக்கியை காட்டி கத்தியை கீழே போடும்படி எச்சரித்தனர்.

ஆனால் அந்த வாலிபர் போலீசாரை நோக்கி முன்னேறி வந்ததால் அதிகாரிகள் 2 பேரும் அவரை துப்பாக்கியால் பலமுறை சுட்டனர். இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

விசாரணையில் கறுப்பினத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் வால்டர் வாலஸ் (வயது 27) என்பது தெரியவந்தது. இதற்கிடையில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அந்நகரில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போலீசாருக்கு எதிராக போராடினர். இந்தப் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. கற்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றால் போலீசாரை தாக்கிய போராட்டக்காரர்கள் போலீசாரின் கார்களுக்கும் தீ வைத்தனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த நகரின் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.
Tags:    

Similar News