செய்திகள்
கோப்புப்படம்

இஸ்ரேலுடன் தூதரக உறவை இயல்பாக்குவதற்கு சூடான் சம்மதம் - டிரம்ப் தகவல்

Published On 2020-10-24 21:23 GMT   |   Update On 2020-10-24 21:23 GMT
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைனை தொடர்ந்து மற்றொரு அரபு நாடான சூடான் இஸ்ரேலுடன் தூதரக உறவை இயல்பாக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
வாஷிங்டன்:

1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளும், அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலை புறக்கணித்து வந்தன. எனினும் 1979-ம் ஆண்டு எகிப்தும், 1994-ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த சூழலில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை கொண்டுவரும் விதமாக இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவை இயல்பாக்குவதற்கான முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதன் பலனாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் ஆகிய இரு அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் தூதரக உறவை இயல்பாக்குவதற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைனை தொடர்ந்து மற்றொரு அரபு நாடான சூடான் இஸ்ரேலுடன் தூதரக உறவை இயல்பாக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தபடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு மற்றும் சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த தகவலை தெரிவித்தார்.

சூடானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்கும் தங்கள் நாடுகளுக்கிடையேயான சண்டையின் நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

அடுத்து வரும் வாரங்களில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என இஸ்ரேல் மற்றும் சூடான் நாடுகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே சவுதி அரேபியா உள்பட மேலும் ஐந்து அரபு நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவை இயல்பாக்குவதற்கு தயாராக உள்ளதாகவும் அது விரைவில் சாத்தியமாகும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
Tags:    

Similar News