செய்திகள்
ஜோ பிடன்

நான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி

Published On 2020-10-24 03:56 GMT   |   Update On 2020-10-24 03:56 GMT
நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன் என ஜோ பிடன் தெரிவித்தார்.
வாஷிங்டன்:

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்துகள் இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கின்றன.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும்?, எப்போது பயன்பாட்டிற்கு வரும்?, அதன் விலை எவ்வளவாக இருக்கும்? என்று இதுவரை யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியானது அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் தலைவர்கள் அறிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தனது பிரச்சாரத்தின்போது பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால், அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய பிடன், ‘குடியரசுக் கட்சி ஆட்சியில் அதிபராக இருப்பவர் வைரசை எதிர்த்துப் போராடுவதை கைவிட்டுவிட்டார். மேலும் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன். 

கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். மக்கள் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி இலவசமாக தடுப்பூசி போடப்படும். செலவினங்களுடன் போராடும் மக்களுக்கு உதவி செய்வோம்’ என்றார்.

இதேபோல் கொரோனா தடுப்பூசி வரும் வாரங்களில் தயாராக இருக்கும் என்றும், அதை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அதிபர் டிரம்பும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News