செய்திகள்
சிகிச்சையை விளக்கும் டாக்டர்

கொரோனா வைரஸ் பாதிப்புகளால் மோசமடைந்து வருகிறது பாகிஸ்தான்

Published On 2020-10-23 17:35 GMT   |   Update On 2020-10-23 17:35 GMT
கொரோனா பாதிப்புகளால் பாகிஸ்தானின் நிலைமை மோசமடைந்து வருகிறது என அந்நாட்டு தேசிய ஆணை மற்றும் செயல் மையம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

பாகிஸ்தானில் இதுவரை 3,24,744 பேர் கொரோனா பாதிப்புகளை சந்தித்து உள்ளனர்.  இதுவரை அந்நாட்டில் 6,692 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்புகள் பற்றிய தேசிய ஆணை மற்றும் செயல் மையம் சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் பேசுகையில், கொரோனா பாதிப்பு விகிதம் நாட்டில் உயர்ந்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்ப்பது அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் திடீரென உயர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான அறிக்கை ஒன்றில், தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம் உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. அது 40 சதவீதம் அளவை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் முசாபராபாத், ஐதராபாத், கராச்சி மற்றும் கில்கித் ஆகிய நகரங்களில் அதிகளவு கொரோனா பாதிப்பு விகிதம் உள்ளது.  நாடு முழுவதும் பிற பகுதிகளிலும் இந்த விகிதம் அதிகரித்துள்ளது என மையத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்நாட்டின் கொரோனா வளர்ச்சி விகிதம் 2.06 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது சர்வதேச அளவில் 2.72 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது.

இதேபோல், மொத்த உயிரிழப்புகளில் 71 சதவீதத்தினர் ஆண்களாக உள்ளனர். அவர்களில் 76 சதவீதத்தினர் 50 வயது கடந்தவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 2 மாதங்களில் இல்லாத வகையில், கடந்த 21-ம் தேதி கொரோனா பாதிப்பு விகிதம் பாகிஸ்தானில் 2.58 சதவீதம் என்ற அளவில் இருந்தது. நிலைமையை தேசிய ஆணை மற்றும் செயல் மையம் உன்னிப்புடன் கவனித்து வருகிறது என தெரிவித்துள்ளது.

மேலும், வளர்ச்சி இல்லையெனில் சேவைகளை நிறுத்தும் கடுமையான பழைய முடிவுகளை மீண்டும் எடுக்க வேண்டி வரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News