செய்திகள்
அமீரகம், இஸ்ரேல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

அமீரகம், இஸ்ரேல் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Published On 2020-10-20 20:19 GMT   |   Update On 2020-10-20 20:19 GMT
டெல் அவிவ் நகரில் அமீரகம், இஸ்ரேல் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
டெல் அவிவ்:

டெல் அவிவ் நகரில் அமீரகம், இஸ்ரேல் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் இரு நாட்டில் வசிக்கும் குடியுரிமை பெற்றவர்கள் விசா இல்லாமல் 2 நாடுகளுக்கும் சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமீரகம், இஸ்ரேல் இடையே வர்த்தக ரீதியில் வாரத்திற்கு 28 பயணிகள் விமானங்களை இயக்க இரு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரமான டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து துபாய் மற்றும் அபுதாபி இடையே பயணிகள் விமான போக்குவரத்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக நேற்று முன்தினம் காலை அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற எதிகாத் பயணிகள் விமானம் பென் குரியன் விமான நிலையத்தில் முதல் முறையாக தரையிறங்கியது. பிறகு அங்கிருந்து சுற்றுலாத்துறை பிரதிநிதிகளை 2 நாள் அமீரக சுற்றுப்பயணத்திற்கு அழைத்துக்கொண்டு அபுதாபி திரும்பியது.

இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் விமான போக்குவரத்து குறித்து முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை அபுதாபியில் இருந்து அமீரக பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் தக், அமீரக நிதித்துறையின் துணை மந்திரி ஒபைத் அல் தாயர் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் குழுவினர் இஸ்ரேலுக்கு சென்றனர்.

இதற்காக எதிகாத் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அபுதாபியில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் நேற்று மதியம் அமீரக நேரப்படி 1 மணிக்கு டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் ஏற்கனவே அபுதாபிக்கு சென்று இருந்த அமெரிக்க கருவூல செயலர் ஸ்டீவன் முன்சின் மற்றும் மத்திய கிழக்கு பிரதிநிதி அரி பெர்கோவிட்ஸ் ஆகியோரும் இஸ்ரேலுக்கு சென்றனர்.

அதன் பிறகு விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் நடைபெற்ற ஒப்பந்த நிகழ்ச்சியில் அமீரக மந்திரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு பெறுவதற்கு 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இஸ்ரேல் தரப்பில் அந்நாட்டின் நிதி மந்திரி இஸ்ரேல் கட்ஸ், அமீரகத்தின் தரப்பில் துணை நிதி மந்திரி ஒபைத் அல் தாயர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் விசா இல்லாமல் 2 நாடுகளுக்கும் பயணம் செய்ய இருதரப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு பேசும்போது கூறியதாவது:-

இன்று நாம் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளோம். இந்த வரலாறானது தலைமுறைகளை கடந்து நிலைத்து நிற்கும். சமாதானத்திற்கு புகழ் சேர்க்கும். இந்த நாளை என்றும் நினைவில் வைத்துக்கொள்வோம். அமீரகத்துடன் தொழில்நுட்பம், தொழில்துறை, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அமீரகம், இஸ்ரேல் நாடுகளில் வசிக்கும் வர்த்தகர்கள் மற்றும் குடிமக்கள் அனைவருக்கும் சிறந்த பொருளாதார சூழலை உருவாக்க இருதரப்பில் இருந்தும் புதிய முதலீடுகள் செய்யப்படும். வான் வழி போக்குவரத்து இரு நாடுகளுக்கு இடையே திறந்து விடப்பட்டுள்ளது. விசா இல்லாமல் குடிமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து அமீரக துணை நிதி மந்திரி ஒபைத் அல் தாயர் பேசியதாவது:-

இந்த ஒப்பந்தங்களில் குறிப்பாக நிதி மற்றும் வர்த்தகத்தை பலப்படுத்தி இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமீரக அமெரிக்க இஸ்ரேல் என்ற நிதி உருவாக்கப்பட்டு 300 கோடி அமெரிக்க டாலர் இருப்பு வைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு உதவும் வகையில் பல்வேறு சட்டப்பூர்வமான வரைவுகளை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமீரக பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் தக், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் மந்திரிகள், உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதற்கிடையே அமீரகத்தின் சார்பில் டெல் அவிவ் நகரில் தூதரகம் அமைக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் தரப்பிலும் அபுதாபியில் அந்நாட்டின் தூதரகத்தை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கான அதிகாரப்பூர்வமான கடிதத்தை அமீரகத்தின் அரசு பிரதிநிதியான ஒமர் சைப் கோபாசிடம் அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் கொடுத்து அனுப்பினார். அதனை அவர் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி காபி அஷ்கெனசியிடம் ஒப்படைத்தார்.
Tags:    

Similar News