செய்திகள்
டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர்

ஜோ பைடன் இந்தியாவுக்கு எதிரானவர் - டிரம்பின் மகன் சொல்கிறார்

Published On 2020-10-19 19:05 GMT   |   Update On 2020-10-19 19:05 GMT
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் இந்தியாவுக்கு எதிரானவர் என்று ஜனாதிபதி டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர் விமர்சித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந்தேதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் இறக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஜோ பைடன் சீனாவின் ஆதரவாளர் என்றும் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் அமெரிக்காவை சீனா தன் வசமாக்கிக்கொள்ளும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இது ஒருபுறமிருக்க ஜோ பைடனை வெற்றிபெற செய்ய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவின் தலையீடு இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது.

ஆனால் தான் ஒருபோதும் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதில்லை என்று கூறி ஜோ பைடன் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். இந்த நிலையில் ஜோ பைடன் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அவர் இந்தியாவுக்கு எதிரானவர் என ஜனாதிபதி டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர் விமர்சித்துள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து டிரம்ப் ஜூனியர் எழுதிய புத்தகத்தின் வெற்றிவிழா நியூயார்க் நகரில் நடைபெற்றது.

இதில் டிரம்பின் ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் டிரம்ப் ஜூனியர் பேசியதாவது:-

சீனாவின் அச்சுறுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அமெரிக்கர்களை தவிர வேறு யாரும் அதை பற்றி சிறப்பாக அறிந்திருக்க மாட்டார்கள்.

ஜோ பைடனின் மகனான ஹண்டர் பைடனுக்கு சீனா 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்தது. ஏனென்றால் பைடன்களை விலைக்கு வாங்க முடியும் என்பதை சீனா அறிந்திருந்தது. அதனால்தான் ஜோ பைடன் சீனாவிடம் மென்மையாக நடந்து கொள்கிறார்.

அதேசமயம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அவர் இந்தியாவுக்கு எதிரானவராக உள்ளார்.

ஜனநாயக கட்சியினர் என்ன செய்கிறார்கள், கடந்த 6 மாதங்களாக அவர்கள் எதை புறக்கணித்து வருகிறார்கள் என்பதை இந்திய வம்சாவளியினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை அவர்கள் தேர்தலில் எதிரொலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்திய சமூகத்தை நான் நன்றாக புரிந்து கொள்கிறேன். இந்திய சமூகம் என் இதயத்திற்கு அருகில் உள்ளது. கல்வி சார்ந்ததாயினும் சரி, குடும்பம் சார்ந்ததாயினும் சரி இந்திய சமூகத்தின் கடின உழைப்பு அளப்பரியது.

அமெரிக்காவில் என் தந்தை கலந்துகொள்ளும் பேரணிகள் மிகப் பெரியவை என்று நான் நினைத்தேன்.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் ஆமதாபாத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடியுடன் எனது தந்தையின் உற்சாகத்தை பார்த்தபோது, அதுவே மிகப்பெரிய பேரணி என்பதை உணர்ந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News