செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

நவாஸ் ஷெரீப் நவம்பர் 24-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் - பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-10-10 20:12 GMT   |   Update On 2020-10-10 20:12 GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவதை தவிர்க்க நவம்பர் 24-ந் தேதிக்குள் அவர் கோர்ட்டில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவதை தவிர்க்க நவம்பர் 24-ந் தேதிக்குள் அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். பனாமா கேட் ஊழல் வழக்கில் இவரை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தகுதி நீக்கம் செய்தது.

அதனைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி அல்ஆசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்புக்கு சிறையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை லண்டன் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் காலம் முடிந்த பிறகும் அவர் சிகிச்சை பெறுவதாக கூறி தொடர்ந்து லண்டனிலேயே தங்கியுள்ளார். ஊழல் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பாகிஸ்தான் கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் நவாஸ் ஷெரீப் அதனை புறக்கணித்து வருகிறார்.

இதனால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவாஸ் ஷெரீப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்த சூழலில் கடந்த மாத இறுதியில் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பிரதமர் இம்ரான்கான் அரசு குறித்தும், அரசில் ராணுவத்தின் தலையீடு குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

நவாஸ் ஷெரீப்பின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து அவரை லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தி ஊழல் வழக்குகளை சந்திக்க வைக்க இம்ரான் கான் அரசு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.

அதன்படி நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான ஊழல் வழக்குகளில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நவாஸ் ஷெரீப் மீதான அல்ஆசியா மற்றும் ஆவென் பீல்டு ஊழல் வழக்குகள் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.

விசாரணையின் முடிவில், நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு குற்றவாளியாக அறிவிக்கப்படாமல் இருக்க நவம்பர் 24-ம் தேதிக்குள் அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

குறிப்பிட்ட அந்த தேதிக்குள் நவாஸ் ஷெரீப் ஆஜராகாத பட்சத்தில் அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

நவாஸ் ஷெரீப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்படுவதோடு அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News