செய்திகள்
டிரம்ப்

இன்று முதல் அரசு பணிகளை தொடங்குகிறார் ஜனாதிபதி டிரம்ப் - வெள்ளை மாளிகை மருத்துவர் தகவல்

Published On 2020-10-09 19:52 GMT   |   Update On 2020-10-09 19:52 GMT
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த கொரோனா சிகிச்சை முடிவடைந்ததாகவும் இன்று (சனிக்கிழமை) முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஜனாதிபதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 1-ந்தேதி உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் டிரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த டிரம்ப், 4 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந்தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து தான் முற்றிலும் நலமாக இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை மீண்டும் தொடங்க ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

அதே சமயம் டிரம்ப் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டாலும் அவர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டாரா என்பதை அவரது மருத்துவர்கள் தெளிவுபடுத்தவில்லை என ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாகவும் இன்று (சனிக்கிழமை) முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜனாதிபதி தனது மருத்துவ குழுவால் பரிந்துரைக்கப்பட்ட கொரோனாவுக்கான சிகிச்சையை முடித்தார். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பியது முதல் அவரது உடல் நிலை சீராக உள்ளது. நோயின் முன்னேற்றத்தை குறிக்க எந்த அறிகுறிகளும் இல்லாமல் உள்ளது.

ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா கண்டறியப்பட்டதிலிருந்து இன்று 10-வது நாளாக இருக்கும். மேலும் குழு நடத்திவரும் மேம்பட்ட நோயறிதல்களின் பாதையின் அடிப்படையில் இன்று ஜனாதிபதி பொது வாழ்க்கைக்கு பாதுகாப்பாக திரும்புவதை நான் முழுமையாக எதிர்பார்க்கிறேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளை மாளிகை தலைமை மருத்துவரின் அறிக்கை வெளியான சிறிது நேரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜனாதிபதி டிரம்ப், புளோரிடா மாகாணத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில் “நான் நன்றாக உணர்கிறேன். மிகவும் நன்றாக உணர்கிறேன். தேர்தல் பிரசாரத்தை தொடங்க தயாராக உள்ளேன். அதன்படி இன்று நான் பிரசாரத்தில் ஈடுபடுகிறேன்” என்றார்.

இதனிடையே அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான நான்சி பெலோசி டிரம்ப் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 25-வது சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவது குறித்து எம்.பி.க்களுடன் ஆலோசித்து வருவதாகவும் நான்சி பெலோசி தெரிவித்தார்.

அமெரிக்காவில் 25-வது சட்டத்திருத்தம் என்பது கடந்த 1967-ம் ஆண்டு ஜனாதிபதி கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட பின் கொண்டுவரப்பட்டது. இதன்படி ஜனாதிபதி செயல்படாத சூழலில் இருக்கும்போது, அதாவது நோயால் பாதிக்கப்படுதல், உயிரிழப்பு, சிகிச்சையில் நீண்டநாள் இருத்தல் போன்றவற்றின்போது, ஜனாதிபதி தன்னுடைய அலுவலகப் பணிகளைக் கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், அடுத்த இடத்தில் இருக்கும் துணை ஜனாதிபதியிடம் பொறுப்பை ஒப்படைத்து பணிகளைக் கவனிக்க உத்தரவிட வேண்டும். ஒருவேளை துணை ஜனாதிபதியும் இல்லாத சூழலில், அல்லது அவரும் நோயால் பாதிக்கப்பட்டால், உயிரிழக்க நேர்ந்தால், இரு அவைகளிலும் மூத்த உறுப்பினர்கள், பெரும்பான்மை உள்ளவருக்கு அந்த பொறுப்பை ஜனாதிபதி வழங்கலாம்.
Tags:    

Similar News