செய்திகள்
குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம்

‘குவாட்’ நாடுகள் கூட்டத்தில் சீனாவின் எழுச்சி குறித்து இந்தியா, அமெரிக்கா ஆலோசனை

Published On 2020-10-06 23:48 GMT   |   Update On 2020-10-06 23:48 GMT
‘குவாட்’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் சீனாவின் எழுச்சி குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் விவாதித்தன.
டோக்கியோ:

உலக வரைபடத்தில் நாற்கர (குவாட்) வடிவில் அமைந்திருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் குவாட் குழுவை உருவாக்கி உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த இந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது.

கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில் 4 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் முதல் முறையாக நேரடியாக பங்கேற்றனர். இந்தியாவின் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்காவின் மைக் பாம்பியோ, ஜப்பானின் டோஷிமிட்சு மொடேகி, ஆஸ்திரேலியாவின் மரைஸ் பெய்ன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த குவாட் குழுவின் அங்கத்தினராக விளங்கும் 4 நாடுகளின் பொதுவான அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது. அந்தவகையில் லடாக் விவகாரத்தில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவுடன் சீனா மோதி வருகிறது. கொரோனா தொற்று, வர்த்தக பிரச்சினை, தொழில்நுட்பம், ஹாங்காங்-தைவான் விவகாரங்கள், மனித உரிமை என பல்வேறு பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் மோதி வருகின்றன.

இதைப்போல ஆஸ்திரேலியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு சமீபத்திய மாதங்களாக சீரழிந்து கிடக்கிறது. கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பான் நிர்வகித்து வரும் பல தீவுகளுக்கு சீனா உரிமை கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அந்த இரு நாடுகளும் மோதி வருகின்றன.

இவ்வாறு 4 நாடுகளுக்கும் பொதுவான எதிரியாக சீனா உருவெடுத்துள்ள நிலையில், இந்த பிராந்தியத்தில் அந்த நாட்டின் எழுச்சி குறித்து இந்த நாடுகள் நேற்றைய குவாட் குழு கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்தன.

இந்த கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் யோஷிகைட் சுகாவும் கலந்து கொண்டார். அவர் உரையாற்றும்போது கூறுகையில், ‘கொரோனா தொற்றைப்போல ஏராளமான சவால்களை சர்வதேச சமூகம் எதிர்கொண்டு வருகிறது. இதனால்தான் பல நாடுகளுடன் முடிந்தவரை ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தி நமது பார்வையை பரவலாக்க வேண்டிய மிகச்சரியான நேரமாக இந்த காலகட்டம் உள்ளது. சீனாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டை எதிர்க்கும் நமது ‘தாராள மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்’ திட்டம், கொரோனா சவால்களுக்கு மத்தியில் முன்னெப்போதையும் விட முக்கியமானதாக இருக்கிறது’ என்று கூறினார்.

இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பார்வையை கொண்டிருந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, ‘தாராள மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்’ திட்டத்தின் முக்கிய காரணகர்த்தாவாக இருந்ததாக கூறிய சுகா, அவரது திட்டங்களை தொடர்வேன் என்றும் உறுதியளித்தார்.

பின்னர் ஜப்பான் பிரதமர் இல்லாமல், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் விரிவான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். முன்னதாக ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா நாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் மைக் பாம்பியோ, தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அந்தவகையில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அவர் நடத்திய சந்திப்பின்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள், சீனாவின் எழுச்சிக்கு மத்தியில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அத்துடன் இந்தியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோவுடனான சந்திப்பு மூலம் எனது டோக்கியோ பயணம் தொடங்கி இருக்கிறது. பல துறைகளில் நமது ஒத்துழைப்பு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்காக இணைந்து உழைப்போம்’ என்று கூறியிருந்தார்.

இதைப்போல ஜப்பான் பிரதமர் யோஷிகைட் சுகாவையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். ஜப்பானின் புதிய பிரதமராக சுகா கடந்த மாதம் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருடனான ஜெய்சங்கரின் முதலாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News