செய்திகள்
கோப்புப்படம்

இஸ்ரேலில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் - வீதிகளில் இறங்கி ஆவேச போராட்டம்

Published On 2020-10-04 23:51 GMT   |   Update On 2020-10-04 23:51 GMT
இஸ்ரேலில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஆவேச போராட்டம் நடத்தினர்.
ஜெருசலேம்:

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு மே மாதம் தொடக்கத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கொரோனா வைரசை முறையாகக் கையாளவில்லை என்றும் திறனற்ற அவரது நிர்வாகத்தால் நாடு பெரும் இழப்பை சந்தித்து உள்ளதாகவும் கூறி அவரை பதவி விலக வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் முதல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா பீதிக்கு மத்தியிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

இந்தநிலையில் இஸ்ரேலில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீச தொடங்கி இருப்பதாக கூறி 2-வது முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கை கடந்த மாதம் 18-ந் தேதி பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அமல்படுத்தினார். இந்த முழு ஊரடங்கு அக்டோபர் 14-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அப்போது அவர் அறிவித்தார்.

ஆனால் இந்த முழு ஊரடங்கு அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் முயற்சி என மக்கள் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை நிராகரித்த பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்கினார்.

இந்தநிலையில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஆவேச போராட்டம் நடத்தினர். தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர். நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல் அவிவ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. டெல் அவிவ் நகரில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்திருந்த அந்த நகரின் மேயர் ரான் ஹுல்டாய் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் காயமடைந்தார்.

அதேபோல் இருதரப்பு மோதலில் போலீசார் பலரும் ஏராளமான போராட்டக்காரர்களும் காயமடைந்தனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டதாகவும், பலருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இஸ்ரேலில் நேற்று புதிதாக 5,523 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 1,682 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News