செய்திகள்
கலிபோர்னியா, காட்டுத்தீ

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத்தீ - கலிபோர்னியாவில் 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின

Published On 2020-10-04 18:26 GMT   |   Update On 2020-10-04 18:26 GMT
இந்த ஆண்டு மட்டும் கலிபோர்னியா காட்டுத்தீயில் 40 லட்சம் ஏக்கர் நிலம் சாம்பலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின்போது காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கலிபோர்னியா காட்டுத்தீ மிகப்பெரிய பேரிடராக மாறியுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் மத்தியில் தொடங்கி தற்போது வரை கட்டுக்குள் அடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ கலிபோர்னியாவை நிலைகுலைய செய்துள்ளது.

சுமார் 25 பெரிய காட்டுத்தீ இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. இது தவிர ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக காட்டுத்தீ உருவாகிறது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 17,000 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இதனிடையே காட்டுத்தீயின் தாக்கம் அதிகமாக உள்ள நாபா பள்ளத்தாக்கு மற்றும் சொனோனா மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 28,000 வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் அச்சுறுத்தலில் உள்ளன.

இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் கலிபோர்னியா காட்டுத்தீயில் 40 லட்சம் ஏக்கர் நிலம் சாம்பலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு வரலாற்றுத் தருணமாக மாறியுள்ளதாக குறிப்பிட்ட அதிகாரிகள் கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாகவும் தெரிவித்தனர். மேலும் காட்டுத்தீ காரணமாக கிட்டத்தட்ட 80,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இதுவரை 600 கட்டிடங்கள், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ளதாகவும் கூறினர்.
Tags:    

Similar News