செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்

கொரோனா தொற்றுக்கு ஆளான டிரம்ப் விரைவில் குணமடைய சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து

Published On 2020-10-04 18:17 GMT   |   Update On 2020-10-04 18:17 GMT
சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீஜிங்:

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் பரவிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் அமெரிக்கா உள்பட உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பல்வேறு நாட்டு தலைவர்கள் டிரம்ப் மற்றும் மெலனியா கொரோனாவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் கொரோனா பாதிப்புக்கு ஆளானதை அறிந்து நானும், எனது மனைவி பெங் லியுவானும் வருத்தம் அடைந்தோம். அவர்கள் இருவரும் விரைவில் குணமடைய எங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்” என்று ஜின்பிங் குறிப்பிட்டதாக சீன அரசு செய்தி ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பி விட்டதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அவர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவர சீன அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News