செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

கொரோனா தடுப்பூசி 6 மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு

Published On 2020-10-04 01:51 GMT   |   Update On 2020-10-04 01:51 GMT
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி 6 மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன்:

உலகை உலுக்கி வரும் உயிர்கொல்லி கொரோனா வைரசை அழிக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி 6 மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு வட்டார தகவல்களை சுட்டிக்காட்டி ‘தி டைம்ஸ்’ பத்திரிகை இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி குழந்தைகளின் பயன்பாட்டுக்கு எதிர்பார்த்ததை விட விரைவாக தடுப்பூசி வெளியாகிவிடும் எனவும் வயது வந்தவர்களின் பயன்பாட்டுக்கு 6 மாதங்களுக்குள் தடுப்பூசி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகளை ஐரோப்பிய ஒன்றிய மருந்து முகமை ஏற்கனவே ஆராயத் தொடங்கி விட்டதாகவும், எனவே மற்ற நாடுகளை காட்டிலும் இங்கிலாந்தில் மிக விரைவில் கொரோனா தடுப்பூசி வெளியாகும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இங்கிலாந்தில் ஒரு நபரிடம் இந்த தடுப்பூசி எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து பல நாடுகளில் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டதும், பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News