செய்திகள்
கிம் ஜாங் உன் - டொனால்டு டிரம்ப்

கொரோனாவில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார் வடகொரிய அதிபர் கிம்

Published On 2020-10-03 00:33 GMT   |   Update On 2020-10-03 00:33 GMT
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பியாங்யாங்:

உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவும் நேற்று கொரோனா பரிசோதனைசெய்தனர். 

அதில் இருவருக்குமே கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.

ஆனால், அதிபர் டிரம்புக்கு லேசான காய்ச்சல் நீடித்து வந்தது. இதையடுத்து, அவர் வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும், டிரம்ப் மேற்கொள்ளவிருந்த அதிபர் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் குணமடைய பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் டிரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், அவரது மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது வருத்தமளிப்பதாக
அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வடகொரிய அதிபர் கிம் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் உலக அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தபடுகிறது. 

Tags:    

Similar News