செய்திகள்
டுவிட்டர் கில்லர் டகாஹிரோ சிராயிஷி

9 பேரை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட டுவிட்டர் கில்லர் -மரண தண்டனைக்கு வாய்ப்பு

Published On 2020-10-01 11:03 GMT   |   Update On 2020-10-01 11:03 GMT
ஜப்பானின் டுவிட்டர் கில்லர் என்றழைக்கப்படும் கொடூர கொலையாளி தான் 9 நபர்களை கொன்ற குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
டோக்கியோ:

ஜப்பானில் கடந்த 2017ஆம் ஆண்டில் 23 வயது பெண் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாக டுவிட்டரில் பதிவிட்ட பிறகு காணாமல் போய்விட்டார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. திடீரென அப்பெண்ணின் டுவிட்டர் கணக்கை அவரது சகோதரர் திறந்துபார்த்தபோது சந்தேகத்திற்குரிய தகவல் கிடைத்தது.

அப்பெண் டுவிட்டரில் டகாஹிரோ சிராயிஷி (வயது 29) என்பவருடன் உரையாடியது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். டகாஹிரோ சிராயிஷி வீட்டில் சோதனை மேற்கொண்டபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

டகாஹிரோ சிராயிஷி தனது வீட்டில் 9  நபர்களை கொலை செய்து உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி ஃப்ரிட்ஜ், டூல் பாக்ஸ் மற்றும் இதர இடங்களில் ரகசியமாக சேமித்து வைத்திருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

தற்கொலை செய்ய விரும்புவோரை டகாஹிரோ சிராயிஷி டுவிட்டர் வழியாக தொடர்புகொண்டு அவர்களின் திட்டத்திற்கு உதவுவதாக கூறி, அவர்களை கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை பிரித்து சேமித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. 

ஜப்பானை உலுக்கிய இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை நேரில் பார்க்க 600க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது, 9 பேரையும் தான் கொலை செய்ததாக குற்றத்தை டகாஹிரோ சிராயிஷி ஒப்புக்கொண்டார்.

குற்றத்தை ஒப்புக்கொண்டால் சட்டப்படி டகாஹிரோ சிராயிஷிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், கொலை செய்யப்பட்டவர்களின் ஒப்புதலோடு அவர் கொலை செய்ததால் தண்டனையை குறைக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் தனது வாதத்தின்போது கேட்டுக்கொண்டார். 

ஆனால், வழக்கறிஞர் கூறியதற்கு மாறாக, தான் ஒப்புதல் பெறாமல் ஒன்பது பேரையும் கொன்றுவிட்டதாக டகாஹிரோ சிராயிஷி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எனவே, அவருக்கு மரண தண்டனை கிடைக்கவே வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News