செய்திகள்
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்

உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல் - ஐ.நா. பொதுச்செயலாளர் கருத்து

Published On 2020-09-29 19:07 GMT   |   Update On 2020-09-29 19:07 GMT
உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கும் மைல்கல் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றியது. இந்த 10 மாத காலத்தில் உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளிவிவரங்கள்படி, இந்த தொற்று உலகமெங்கும் 3.36 கோடி பேரை தாக்கி உள்ளது. இந்த தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்து 7 ஆயிரத்து 726 ஆகும்.

இதுபற்றி ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நமது உலகம் ஒரு வேதனையான மைல் கல்லை எட்டி உள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயில் இருந்து 10 லட்சம் உயிர்களை இழந்துள்ளது. இது மனதை நெருடும் எண்ணிக்கை ஆகும்.

ஆனாலும் தனிப்பட்ட ஒரு உயிரைக்கூட நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது. அவர்கள் நமது தந்தைகள், தாய்மார்கள், மனைவிகள், கணவர்கள், சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் மற்றும் சகாக்கள்.

இந்த நோயின் காட்டுமிராண்டித்தனத்தால் வலி பெருகி உள்ளது. இன்னும் வைரஸ் பரவுதலும், வேலை இழப்பு ஏற்படுதலும், படிப்பு சீர்குலைதலும், வாழ்வை கொந்தளிக்க வைத்துள்ளது. இதற்கு கண் எதிரே முடிவும் இல்லை.

நாம் இந்த சவாலை கடந்து வர முடியும். ஆனால் நாம் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பொறுப்பான தலைமை முக்கியம், அறிவியல் முக்கியம், ஒத்துழைப்பு முக்கியம். தவறான தகவல்கள் கொல்கின்றன. தனி மனித இடைவெளியை அனைவரும் பராமரிக்க வேண்டும். எல்லோரும் முக கவசம் அணிய வேண்டும். அனைவரும் அடிக்கடி கழுவி கைசுத்தம் காக்க வேண்டும்.

இவ்வாறு ஆன்டனியோ குட்டரெஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் 10 லட்சம் பேருக்கு மேல் பலியானதையொட்டி மிச்சிகன் பல்கலைக்கழக மருத்துவ வரலாற்று பேராசிரியர் டாக்டர் ஹோவர்ட் மார்க்கல் கருத்து தெரிவிக்கையில், “இது ஒரு எண் மட்டுமல்ல, இது மனிதர்கள். நாம் நேசிக்கும் நபர்கள். இவர்கள் நமது சகோதரர்கள், சகோதரிகள், நமக்கு தெரிந்தவர்கள்” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News