செய்திகள்
அர்மீனியா - அசர்பைஜான் ராணுவ டாங்கிகள் தாக்குதல்

அர்மீனியா - அசர்பைஜான் இடையே பயங்கர மோதல் - ராணுவம் தயாராக இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதால் போர் பதற்றம்

Published On 2020-09-27 15:44 GMT   |   Update On 2020-09-27 15:44 GMT
அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அர்மீனியா உத்தரவிட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
யெரிவன்:

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாகவே இருந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டது. அர்மீனியாவில் கிருஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். 

இரு நாடுகளையும் எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணம் அமைந்திருந்தது. 

மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாகாணத்தில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவாளர்களே வாழ்ந்து வந்தனர். அவர்கள் அசர்பைஜானில் இருந்து பிரிந்து சென்று அர்மீனியாவில் தான் சேரவேண்டும் என முடிவு செய்தனர். 

இதனால், சிறு குழுக்களாக இணைந்து அசர்பைஜானுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு முதலே சிறு சிறு சண்டையில் ஈடுபட்டு வந்தனர். 

ஆனால் சோவியத் யூனியன் முடிவுக்கு வந்ததையடுத்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு அர்மீனியா மற்றும் அசர்பைஜான் 
இடையே போர் வெடித்தது.

இந்த போரில் நகோர்னோ-கராபத் மாகாணத்தின் பெரும்பகுதியை அர்மீனியா கைப்பற்றி தனது ராணுவத்தை நிலைநிறுத்தியது. மேலும், அந்த மாகாணத்தில் தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. 

அன்றில் இருந்து பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே அவ்வப்போது மோதல்கள் அரங்கேறி வருகிறது. 

குறிப்பாக 2016-ம் ஆண்டும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்த சண்டைகளை ரஷியா இதுவரை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.



இதற்கிடையில், இந்த மோதலின் போது அர்மீனியாவுக்கு ஆதரவாக ரஷியாவின் செயல்பாடுகள் உள்ளது. அதேபோல், அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கியின் செயல்பாடுகள் உள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் நிலவி வந்தன. 

இந்நிலையில், அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் மாகாணத்தின் தலைநகரான ஸ்டெபனாஹெட் பகுதியில் இன்று அசர்பைஜான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசர்பைஜான் ராணுவத்தின் 2  ஹெலிகாப்டர்கள், 3 உளவு விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக அர்மீனிய ராணுவம் தெரிவித்தது.

ஆனால், அசர்பைஜான் தரப்பிலோ தாக்குதலை முதலில் தொடங்கியது அர்மீனியாதான் என குற்றச்சாட்டியுள்ளது. மேலும், அர்மீனியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் 12 வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அசர்பைஜான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சண்டையின்போது பல ஆண்டுகளாக அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை நாங்கள் கைப்பற்றிவிட்டோம் எனவும் அசர்பைஜான் ராணுவம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டியுள்ளதால் மோதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என எல்லைகளை பாதுகாக்க நாட்டுமக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அர்மீனியாவின் பிரதமர் நிகோல் அதிரடியாக இன்று அறிவித்துள்ளார்.

மேலும், ராணுவ சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்பி தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அசர்பைஜான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அர்மீனியாவுக்கு துருக்கி பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அர்மீனியாவுக்கு ரஷியாவின் ஆதரவு இருப்பதால் இந்த சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அர்மீனியா-அசர்பைஜான் மோதல் ரஷியா-துருக்கி இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
Tags:    

Similar News