செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாகக்கூடும்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Published On 2020-09-26 06:02 GMT   |   Update On 2020-09-26 06:02 GMT
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் கொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாக கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

ஜெனீவா:

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி இருக்கிறது.

இதுவரை 9 லட்சத்து 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 5,818 பேர் இறந்துள்ளனர்.

இந்தநிலையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் கொரோனா வைரசுக்கு 20 லட்சம் பேர் பலியாக கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் அவசர கால மருத்துவ நிபுணர் மைக் ரியான் கூறியதாவது:-

உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும். இதுவரை உலக அளவில் கொரோனா தொற்றால் 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3.2 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். குளிர்காலம் தொடங்குவதால் வடதுருவ நாடுகள்பலவற்றில் கொரோனாவின் 2-வது அலை தொடங்கி உள்ளது.

ஐரோப்பியா முழுவதும் பல பகுதிகளில் மீண்டும் தொற்று பரவ தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மேம்பட்டு உள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

ஆனால் நல்ல சிகிச்சையோ அல்லது தடுப்பு மருந்துகளோ இருந்தாலும் 20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News