செய்திகள்
டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: நியாயமான தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்றுக்கொள்வார்

Published On 2020-09-26 03:23 GMT   |   Update On 2020-09-26 03:23 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டிரம்ப் ஏற்றுக்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் :

நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாகாணங்களில் தபால் மூலம் வாக்களிக்கக் கோரி வருகின்றனர்.

தபால் வாக்குகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது “இந்த தேர்தலில் ஒருவேளை தோல்வியடைந்தால் அதிகாரத்தை அமைதியான முறையில் கைமாற்றி விடுவீர்களா?” என டிரம்பிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு “நான் வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். அது மோசமான ஒன்று. எனவே தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவி விலகப்போவதில்லை” என பதிலளித்தார். இது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டிரம்ப் ஏற்றுக்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்கானி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் “சுதந்திரமான நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி, ஏற்றுக்கொள்வார். ஆனால் உங்கள் கேள்வி ஜனநாயக கட்சி இடம் கேட்கப்படுவது மிகவும் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஏற்கனவே தேர்தல் முடிவுகளை ஏற்கமாட்டோம் என பலமுறை தெரிவித்துள்ளனர்” என்றார்.
Tags:    

Similar News