செய்திகள்
தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்

அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்

Published On 2020-09-26 03:05 GMT   |   Update On 2020-09-26 03:05 GMT
வடகொரியா ராணுவத்தால் தென்கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தென்கொரியாவிடம் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கேட்டார்.
சியோல் :

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமை தணிந்து இணக்கமான சூழல் உருவானது. ஆனால் இந்த இணக்கமான சூழல் நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் மோதல் போக்கு உருவானது.

இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் கொரிய எல்லையில் இருந்த இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடிகுண்டு வைத்து தகர்த்தது. இதனால் கொரிய எல்லையில் பதற்றமான சூழல் உருவானது.

இதற்கிடையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக வடகொரியா தனது எல்லைகளை கடுமையாக்கியதுடன், தங்களது எல்லைக்குள் அத்துமீறி நுழையும் யாரையும் சுட்டுக் கொல்ல அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் தென் கொரியாவின் மீன்வளத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட கொரியாவின் எல்லைக்குள் நுழைந்தார்.

அப்போது அவரை சுற்றி வளைத்த வடகொரியா ராணுவத்தினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் சரியான விளக்கம் அளிக்காமல் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் வட கொரியா ராணுவத்தினர் அவரை சுட்டுக் கொன்றனர். மேலும் அவரது உடலை தீ வைத்து எரித்தனர்.

இதனை உறுதி செய்த தென்கொரியா ராணுவம் வடகொரியா ராணுவத்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதற்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் வட கொரியாவை வலியுறுத்தியது.

இந்தநிலையில் தென்கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்காக வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென்கொரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்கொரிய மீன்வளத்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், அதிபர் மூன் ஜே இன்னுக்கு கடிதம் அனுப்பினார்.

அதில் அவர் தென்கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது எதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் துரதிருஷ்டவசமான இந்த சம்பவத்தால் அதிபர் மூன் ஜே இன் மற்றும் தென்கொரிய குடி மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்ததற்கு அவர்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகள் இடையிலான பிரச்சினையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோருவது இதுவே முதல் முறையாகும். இதனால் இது மிகவும் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் கிம் ஜாங் அன் மன்னிப்பு கோரினார் என்பதை வடகொரியா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையில் தென்கொரியாவின் 72-வது ஆயுதப்படை நாளையொட்டி வடகொரியாவின் எல்லையோரம் அமைந்துள்ள இச்சியோன் நகரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மூன் ஜே இன் “மக்களின் உயிர் மற்றும் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்த ஒரு செயலுக்கும் அரசும், ராணுவமும் உறுதியுடன் பதில் அளிக்கும்” என சூளுரைத்தார்.

Tags:    

Similar News