செய்திகள்
20 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து டாக்டர்கள் 6 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றியபோது எடுத்த படம்.

20 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 6 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

Published On 2020-09-23 03:28 GMT   |   Update On 2020-09-23 03:28 GMT
சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தில் 20 வயது பெண்ணின் கருப்பையில் உருவான 6 கிலோ கட்டியை டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
சார்ஜா:

சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவனையில் கடும் வயிற்று வலி மற்றும் வீக்கத்துடன் 20 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு நீண்ட காலமாக செரிமான கோளாறு மற்றும் நடப்பதில் பிரச்சனை இருந்துள்ளது. பல மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்றும் சரியாகவில்லை. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்கேனில் கருப்பையில் கட்டி வளர்ச்சியடைந்திருப்பதை பார்த்தனர்.

அந்த கட்டி கருப்பை குழாயில் இருந்து வளர்ச்சியடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். ஆனால் அதில் பெரும் சவால் காத்திருந்தது. கட்டி மிக நெருக்கமாக கருப்பையில் உள்ளதால் கருப்பை குழாய் மற்றும் கருமுட்டை பகுதிகள் சேதமடையாமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

ஒருவேளை சேதம் ஏற்பட்டால் இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்பட்டு அந்த பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை இருந்தது. ஆனாலும், அதனை மிக நுட்பமான அறுவை சிகிச்சையில் அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகம்மது ஜாயித் தலைமையிலான மருத்துவ குழு அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.

பல மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 6 கிலோ எடையுள்ள கட்டியானது அகற்றப்பட்டது. டாக்டர்களின் இந்த சாதனைக்கு சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தின் செயல் இயக்குனர் டாக்டர் அலி ஒபைத் அல் அலி பாராட்டு தெரிவித்தார்.
Tags:    

Similar News