செய்திகள்
அமெரிக்காவுக்கு சென்ற அமீரக விண்வெளி வீரர்கள் ஹசா அல் மன்சூரி மற்றும் சுல்தான் அல் நியாதி

நாசாவுடன் துபாய் விண்வெளி மையம் ஒப்பந்தம்- அமீரக வீரர்கள் 2 பேர் அமெரிக்கா பயணம்

Published On 2020-09-22 09:20 GMT   |   Update On 2020-09-22 09:20 GMT
எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசாவுடன் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த பயிற்சியை பெற அமீரக விண்வெளி வீரர்கள் 2 பேர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
துபாய்:

பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுவதற்கு விண்வெளி துறையையே தேர்வு செய்கிறது. இதற்கு காரணம், விண்வெளி பயணம் மிக சாதாரணமானது அல்ல. சாதாரணமாக ஒரு மனிதன் பூமியில் இருப்பதற்கும் காற்று, புவியீர்ப்பு விசை, இரவு பகல், திசை இப்படி எதுவுமே இல்லாத சூழ்நிலையில் மனிதன் சென்று வருவது சவாலான விஷயமாகும்.

தற்போது அமீரகத்தில் இருந்து ஹசா அல் மன்சூரி மற்றும் சுல்தான் அல் நியாதி ஆகியோர் முதல் முறையாக விண்வெளி பயிற்சி பெற்றுள்ளனர். இதில் ஹசா அல் மன்சூரி ரஷியாவின் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வந்துள்ளார். இதற்கான சிறப்பு பயிற்சிகள் ரஷியாவின் யூரி காகரின் விண்வெளி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக விண்வெளி வீரர்களை தேர்வு செய்யும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள விண்வெளி வீரர்கள் மற்றும் எதிர்காலத்தில் விண்வெளிக்கு செல்லும் அமீரக விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அமீரகம் சார்பில் அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமீரகம் சார்பில் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நேற்று இந்த பயிற்சிகளுக்காக அமீரக விண்வெளி வீரர்கள் ஹசா அல் மன்சூரி மற்றும் சுல்தான் அல் நியாதி ஆகியோர் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

அந்த மையத்தில் விண்வெளியில் நடக்கும் பயிற்சி அளிப்பதற்கு சிறப்பு நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. 23 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவில் 7 மணி நேர பயிற்சி அங்கு அளிக்கப்படுகிறது. இதில் தண்ணீருக்கடியில் விண்வெளியில் உள்ளது போன்று எடையற்ற சூழ்நிலை இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி வீரர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் 115 கிலோ எடையுள்ள விண்வெளி உடை வழங்கப்படும். நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் அளிக்கப்படும் இந்த பயிற்சியானது தற்போது அமீரக விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

நாசாவுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தின் விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க நாசாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் அதிக நாட்கள் தங்கி ஆய்வு செய்யவும், விண்வெளியில் நடக்கும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

எதிர்கால விண்வெளி பயணத்திட்டத்தில் அமெரிக்காவில் அளிக்கப்படும் நாசாவின் சிறப்பு பயிற்சியின் மூலம் அமீரக விண்வெளி வீரர்கள் பயிற்சி பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News