செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவால் ஏற்படும் நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனம்

Published On 2020-09-20 19:28 GMT   |   Update On 2020-09-20 19:28 GMT
கொரோனாவால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிய செயற்கை நுண்ணறிவு சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
டாயுவான் சிட்டி:

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக உலகமே தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. ஏறத்தாழ 10 லட்சம் பேரின் உயிரைப்பறித்திருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்படுகிற நிமோனியாவை கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வேலைக்கு இதுவரை பொதுவாக எக்ஸ்ரேதான் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், ஏ.ஐ. என்று சொல்லப்படுகிற செயற்கை நுண்ணறிவு முறைகளை பயன்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு அதிக செயல்திறனை வழங்கும். செலவை குறைக்கும். டாக்டர்களுக்கு சிக்கலான கேஸ்களில் கூட அத்தியாவசிய மருத்துவ வெளிப்பாட்டை அளிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதுபற்றி அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரூ நேக் கூறுகையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம், மனித மாழ்வின் அனைத்து முன் மாதிரிகளையும் மாற்றியதுபோல செயற்கை நுண்ணறிவும் மாற்றிக்காட்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆழமான கற்றல் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது மார்பு எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்து 14 வெவ்வேறு நோய்களை கண்டறியும். இதில் கொரோனாவால் ஏற்படுகிற நிமோனியாவும் அடங்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் மார்பக புற்றுநோயை அதன் வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளுக்கு முன் கணிக்கக்ஸ்ரீகூடிய செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்கி இருப்பது நினைவுகூரத்தக்கது.

இப்போது ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ள செயற்கை நுண்ணறிவு சாதனமானது, அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு நபர் எத்தனை காலம் உயிர்வாழ்வார் என்பதை கணித்து சொல்லி விடும் என்று கூறுகின்றனர். இந்த சாதனமானது, ஒரு நபரின் ரத்த அழுத்தம், வயது, சர்க்கரை அளவு உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து, அவர் எத்தனை ஆண்டு காலம் வாழ்வார் என்பதை அடுத்த 5 ஆண்டுகளில் சொல்லி விடும் என்கிறார்கள். மேலும் ஆராய்ச்சியாளர்கள் சுகாதாரத்துறைக்கென பல செயற்கை நுண்ணறிவு சாதனங்களை உருவாக்கி உள்ளனர். இவற்றை ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தினால், அது டாக்டர்களுக்கு நோயறிதல், முன்கணிப்பு மற்றும் சிகிச்சையில் உதவக்கூடும் என்கிறார்கள். இருப்பினும் இந்த சாதனங்கள் பெரும்பாலானவற்றில் வரம்புகளை கொண்டுள்ளனவாம். அவை ஆய்வகங்களில் மிகவும் துல்லியமானவை என்றாலும், நிஜ வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட தவறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு காரணம், ஆய்வகத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் நல்ல உயர்தரமான எக்ஸ்ரே படங்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு சோதிக்கப்பட்டவை. அதே நேரத்தில் நிஜவாழ்க்கையில் நல்ல மற்றும் மோசமான என இரு வகையான படங்களும் சோதிக்கப்படுகின்றன என்கிறார்கள்.
Tags:    

Similar News