செய்திகள்
பிரதமர் மோடி

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றும் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் - இந்திய தூதர் தகவல்

Published On 2020-09-19 22:08 GMT   |   Update On 2020-09-19 22:08 GMT
நாளை தொடங்கும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றும் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறியுள்ளார்.
நியூயார்க்:

ஐ.நா. பொதுசபையின் வருடாந்திர கூட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆண்டு ஐ.நா.வின் 75-வது ஆண்டு என்பதால் அதன் நினைவாக நாளை உயர்மட்ட கூட்டம் நடக்கிறது.

‘நாம் விரும்பும் எதிர்காலம், நமக்கு தேவையான ஐ.நா.: பன்முகத்தன்மைக்கான நமது கூட்டு உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 193 உறுப்பு நாடுகளும் ஒரு தொலைநோக்கு அரசியல் பிரகடனத்தை ஏற்றுக்கொள்கின்றன. அத்துடன் அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன.

இந்த சிறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதைத்தொடர்ந்து 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந்தேதி வரை பொது சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி 26-ந்தேதி சிறப்புரை நிகழ்த்துவார்.

கொரோனா பரவல் காரணமாக ஐ.நா.வின் பொதுசபை கூட்டம், அதையொட்டிய அமர்வுகள், மாநாடுகள் அனைத்தும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறது. குறிப்பாக நாடுகளின் தலைவர்கள் யாரும் இதில் நேரடியாக பங்கேற்கவில்லை. மாறாக அவர்களது உரைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு, பொது சவை அரங்கில் ஒளிபரப்பப்படுகிறது.

அந்தவகையில் பிரதமர் மோடியின் 2 உரைகளும் வீடியோ முறையில்தான் அங்கு ஒளிபரப்பப்படுகிறது. இந்த ஆண்டு பிரதமர் மோடியின் உரைகள் இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் கூறுகையில், ‘ஐ.நா. பொது சபையில் பிரதமர் மோடியின் உரையும், திட்டமும் உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தியா பங்கேற்க இருக்கும் நிலையில், பிரதமரின் உரை முக்கியத்துவம் பெறுகிறது’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஐ.நா. பொதுசபை தலைவரால் 30-ந்தேதி நடத்தப்படும் பருவநிலை மாற்ற மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உரையாற்றுகிறார். உலக பருவநிலை நடவடிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல 4-வது உலக மகளிர் மாநாட்டின் 25-வது ஆண்டின் நினைவாக அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி நடத்தப்படும் உயர்மட்ட கூட்டத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஸ்மிரிதி இரானியும் உரையாற்றுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News