செய்திகள்
பிரதமர் ஷின்ஜோ அபே

ஜப்பானில் சர்ச்சைக்குரிய யாசுகுனி கோவிலில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே வழிபாடு

Published On 2020-09-19 20:09 GMT   |   Update On 2020-09-19 20:09 GMT
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சர்ச்சைக்குரிய யாசுகுனி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
டோக்கியோ:

ஜப்பானில் 1867-ல் நடந்த போஷின் போர் முதல் 2-ம் உலகப்போர் வரை, போர்களில் இறந்த சுமார் 25 லட்சம் ஜப்பானியர்களின் நினைவாக தலைநகர் டோக்கியோவில் யாசுகுனி என்கிற கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டப்பட்ட காலத்திலிருந்தே சீனாவும், தென்கொரியாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போரின்போது தங்கள் நாட்டு மக்களை கொன்று குவித்தவர்களை தியாகிகளாக ஜப்பான் கருதுவதாகவும், தங்கள் மீதான அடக்குமுறையின் நினைவுச்சின்னமாக யாசுகுனி கோவிலை கருதுவதாகவும் சீனாவும், தென்கொரியாவும் குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் இந்த கோவிலுக்கு ஜப்பானின் அரசியல் தலைவர்கள் செல்வதை சீனாவும், தென் கொரியாவும் வன்மையாக கண்டித்து வருகின்றன. இந்த நிலையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சர்ச்சைக்குரிய யாசுகுனி கோவிலுக்கு நேற்று சென்றார். பிரதமர் பதவியில் இருந்து விலகிய சில தினங்களுக்கு பிறகு அவர் அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். சர்ச்சைக்குரிய கோவிலுக்கு தான் சென்ற தகவலை அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஷின்ஜோ அபே பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் இன்னுமும் அவர் அந்த நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகராக அறியப்படுகிறார். எனவே அவர் சர்ச்சைக்குரிய யாசுகுனி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதை சீனா மற்றும் தென் கொரியா நாடுகள் கடுமையாகக் கண்டிக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News