செய்திகள்
டிரம்ப் முன்னிலையில் ஆப்ரகாம் உடன்படிக்கை

இஸ்ரேலுடன் மேலும் 6 அரபு நாடுகள் விரைவில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன - டிரம்ப் அதிரடி

Published On 2020-09-16 00:30 GMT   |   Update On 2020-09-16 00:30 GMT
இஸ்ரேலுடன் மேலும் 5 முதல் 6 அரபு நாடுகள் விரைவில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக அரபு நாடுகளான எகிப்து, ஜெர்டான், லெபனான், ஈராக், சிரியாவும், பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. இதனால் இஸ்ரேல் உடனான மோதல் போக்கு அதிகரித்து வந்தது.

அரபு நாடுகள் இஸ்ரேலை புறக்கணிக்கும் நடவடிக்கையாக அந்நாட்டுடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஆனால்,1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்தன.

ஆனால், பல ஆண்டுகளாக வேறு எந்த அரபு நாடும் இஸ்ரேலுடனான உறவை மேம்படுத்தாமல் மோதல் போக்குடன் இருந்தது. இந்த நாடுகளுக்கு இடையே 
அமைதியை கொண்டுவர பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இதற்கிடையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகளை 
மேற்கொண்டுவந்தார். மேலும், இஸ்ரேலின் டெல் அவிவ்வில் இருந்த அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றினார். இஸ்ரேலுடன் அமைதி 
ஒப்பந்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக பல்வேறு அரபு நாடுகளுக்கு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பயனாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்பதம் தெரிவித்தன. மேலும், ராஜாங்கம், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இஸ்ரேலுடன் சுமூகமான உறவை மேம்படுத்த அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் ஒப்புக்கொண்டன.

இதனால், இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்ட 3-வது மற்றும் 4-வது அரபு நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன்
இணைந்தன. அதேபோல் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்ட முதல் வளைகுடா நாடுகளும் இவைதான்.

 இந்த நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் வெள்ளைமாளிகையில் நேற்று கையெழுத்தானது. 

ஆபிரகாம் உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷேக் முகமது பின் ஜாயித் அல் 
நஹ்யான் மற்றும் பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டனர். 

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக அதிபர் மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் முகமது,
பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோரை தனித்தனியே சந்தித்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் உடனான சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,’ மேலும் 5 முதல் 6 அரபு நாடுகளுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். கூடிய விரைவில் அவர்களும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன’ என்றார். ஆனால் அவை எந்தெந்த நாடுகள் என்ற தகவலை டிரம்ப் வெளியிடவில்லை.

பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லாதீப் அல் சயானியுடனான சந்திப்பின்போத் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,’ சவுதி அரேபியாவுடனான பேச்சுவார்த்தை மிகவும் நல்ல நிலையில் உள்ளது. அவர்கள் மிகவும் திறந்த மனநிலையுடம் பேசுகின்றனர்’ என்றார்.

ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் இடையேயான விமானப்போக்குவரத்து தங்கள் நாட்டு எல்லைவழியாக நடைபெற சவுதி அரேபியா சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. ஆகையால், விரைவில் சவுதியும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளலாம். அதேபோல் ஓமன் நாடும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுடன் அரபு நாடுகள் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபடுபட்டு சுமூக உறவை மேற்கொள்ளும் பட்சத்தில் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தணிந்து அமைதி நிலவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதற்கிடையில், மத்திய கிழக்கு பகுதியில் ஈரானின் ஆதிக்கத்தை குறைக்கவே இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். 

Tags:    

Similar News