செய்திகள்
சௌமியா சுவாமிநாதன்

குறைந்தபட்ச பாதுகாப்பு இல்லாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது - சௌமியா சுவாமிநாதன்

Published On 2020-09-10 02:26 GMT   |   Update On 2020-09-10 02:26 GMT
குறைந்தபட்ச செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா:

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனைகளை இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனால் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், ரஷியாவின் ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது. இந்த இறுதிகட்ட பரிசோதனையில் 31 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.

பல நாடுகள் பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி வரும் நிலையில் அதன் பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களிடம் எழத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என உலக சுகாதார அமைப்பின் முதன்மை
ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை பற்றி நாம் நினைக்கும்போது தடுப்பூசிகள் நமது மனித சமூகத்திற்கு என்னன்னெ செய்துள்ளது என்பதை ஒருங்கிணைத்து பார்க்கவேண்டும்.

தடுப்பூசிகள் உயிர்காக்கும் தலையீடுகள். உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை கொன்றும், லட்சக்கணக்கானோரை பாதித்த பெரியம்மை, பொலியோ, தட்டம்மை போன்ற நோய்கள் தற்போது இல்லை என்று நினைக்கும்போது நாம் தடுப்பூசிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்.  

எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் குறைந்த பட்ச செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும்.  குறைந்த பட்ச செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாத, மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, உலக நாடுகளின் அரசுகள், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிற்கு நம்பிக்கை அளிக்காத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது. 

எந்த ஒரு கொரோனா தடுப்பூசியின் அளவுகோள் மற்றும் தடுப்பூசியின் திறனை ஆராய நாங்கள் மிகவும் விரிவான மற்றும் முழுமையான செயல்முறையை கொண்டுள்ளோம். இந்த அளவுகோள்களை பூர்த்தி செய்யும் தடுப்பூசிகளையே நாங்கள் பரிந்துரை செய்வோம்.
  
என்றார்.

Tags:    

Similar News