செய்திகள்
கப்பலில் மீண்டும் தீ விபத்து

இலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் தீ விபத்து

Published On 2020-09-08 23:32 GMT   |   Update On 2020-09-08 23:32 GMT
இலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கொழும்பு:

குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு 2.70 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த பனாமா நாட்டை சேர்ந்த ‘நியூ டைமண்ட்’ என்ற சரக்கு கப்பல், கடந்த 3-ந்தேதி இலங்கை கடற்பகுதியில் வந்தபோது தீ விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மாலுமி பலியானார். 22 மாலுமிகளை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டது.

இதையடுத்து இலங்கை விடுத்த கோரிக்கையின் பேரில், எண்ணெய் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் இந்திய கடற்படையும் கை கோர்த்தது. இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளின் வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாக இலங்கை கடற்படை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில் எண்ணெய் கப்பலில் தற்போது மீண்டும் தீ பிடித்துள்ளது. கப்பலுக்குள் தொடர்ந்து தீயினால் ஏற்பட்ட உ‌‌ஷ்ணம் மற்றும் தீ பிழம்புகள் காரணமாக மீண்டும் தீப்பிடித்து உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதையடுத்து கப்பலில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கப்பலில் தீ பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், ரசாயன தெளிப்பான்கள் மற்றும் நீர் பயன்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News