செய்திகள்
மருத்துவ அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா

கொரோனாவுக்கு எதிரான வரலாற்று சோதனையை சீனா கடந்து விட்டது - அதிபர் ஜின்பிங்

Published On 2020-09-08 18:16 GMT   |   Update On 2020-09-08 18:16 GMT
கொரோனாவுக்கு எதிரான வரலாற்று சோதனையை சீனா கடந்து விட்டது என அந்நாட்டு அதிபர் ஜின்பிங் பெருமிதமுடன் கூறியுள்ளார்.
பீஜிங்:

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு ஏற்பட்டது பற்றி உலக நாடுகளுக்கு தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து மளமளவென உலக நாடுகளுக்கு இந்த வைரசின் பாதிப்பு பரவ தொடங்கியது.

இதனால், அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்புக்கு ஆட்பட்டன.  இந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வரை இயல்பு நிலைக்கு திரும்புவதில் முன்னேற்றம் இல்லாத சூழல் உள்ளது.  ஊரடங்கால் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின.  இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் சீன மக்களை காக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் 4 மருத்துவர்களுக்கு தங்க பதக்கங்களை சீன அதிபர் ஜின்பிங் வழங்கினார்.  இதன்பின்னர் விழாவில் பேசிய அவர், கொரோனா வைரசுக்கு எதிரான மக்களின் போரில் நாம் விரைவில் தொடக்க வெற்றியை பெற்று விட்டோம்.  பொருளாதார மீட்சி மற்றும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் உலகில் முன்னிலையில் இருக்கிறோம்.  கொரோனா வைரசுக்கு எதிரான வரலாற்று சோதனையை சீனா கடந்து விட்டது என பெருமிதத்துடன் பேசினார்.

கொரோனா வைரசின் பாதிப்பு பரவலாக உலக நாடுகளின் மீது தாக்கம் ஏற்படுத்தியபோது, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சீனா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கின.  இந்த வைரசின் தொடக்கம் மற்றும் கடுமையான பாதிப்பு ஆகியவற்றை சீனா மறைத்து விட்டது என்றும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
Tags:    

Similar News